தூய கன்னி மரியாவின் பிறப்பு (ஆரோக்கிய அன்னை) விழா

அன்னை மரியாளின் பிறப்பு விழா – தாயின் அன்பு

 

மரியாளின் பிறப்பு விழாவானது முதன்முதலாக கீழை திருச்சபையில் கொண்டாடப்பட்ட ஒரு விழாவாகும். இதன் தொடக்கம் எருசலேமில் உள்ள புனித அன்னாள் ஆலயத்தின் நோ்ந்தளிப்பிலிருந்து வந்ததாகும். ஐந்தாம் நூற்றாண்டில் கட்டியெழுப்பப்பட்ட இவ்வாலயமானது மரியாள் பிறந்த வீட்டின் மீது கட்டியெழுப்பப்பட்டதாக வரலாறு கூறுகின்றது. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க கவிஞரும் கான்ஸ்டான்டிநோபிள் நகர திருத்தொண்டருமான ரோமானுஸ் (500) தனது பாடலில் மரியாளின் பிறப்பைப் புகழ்ந்து பாடியிருப்பது அவர் காலத்தில் இத்திருவிழா பெற்றிருந்த முக்கியத்துவத்தையும், இதன் பெருமையையும் சுட்டிக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. உரோமையில் இத்திருவிழாவானது 7 ம் நூற்றாண்டில் கொண்டாடப்பட்டது. மரியாளின் விண்ணேற்பு பெருவிழாவைப் போன்று இப்பிறப்பு விழாவும் திருத்தந்தை முதலாம் செர்ஜியுஸ் என்பவரால், திருச்சபைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

இப்பிறப்பு திருவிழா திருப்பலியானது, மரியாளின் இறைத்தாய்மை பண்பையும், அவளின் தெய்வ மகன் கிறிஸ்துவை பற்றியதுமாக அமைந்துள்ளது. இந்தியாவில் வேளாங்கண்ணி மாதாவின் திருவிழாவானது செப்டம்பர் 8 ம் நாள், மரியாளின் பிறப்பை மையமாக வைத்துக்கொண்டாடப்படுகிறது. 17 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் போர்த்துக்கல் நாட்டு மாலுமிகள் இந்தியபபெருங்கடலின் சீற்றத்தில் அவதியுறும்போது, மரியாளை நோக்கி அவர்கள் எழுப்பிய வேண்டுதலால், கப்பலானது வேளாங்கண்ணியில் பாதுகாப்பாக கரை சேர்க்கப்பட்டது, மரியாளின் பிறப்பு விழாவான செப்டம்பர் 8 ம் நாள்தான். இந்நிகழ்ச்சிக்கு முன்னரே 16 ம் நூற்றாண்டில் இங்கு நடந்த இரண்டு புதுமைகளான பால்கார சிறுவனுக்கு மாதா காட்சி கொடுத்து பால் பொங்கச் செய்தது மற்றும் மோர் விற்கும் முடமான சிறுவனை நடமாடச் செய்தது ஆகிய நிகழ்ச்சிகளால் வேளாங்கண்ணி அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. இந்தப் புதுமைகளால் வேளாங்கண்ணி கீழைநாடுகளின் லூர்து நகர் என்று அழைக்கப்படுகின்றது.

அன்னை மரியாளின் பங்கு, மீட்பு வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. அன்னை மரியாளுக்கு வழிபாட்டில் நாம் கொடுக்கும் முக்கியத்துவம் எந்த ஒரு தருணத்திலும், மிகைப்படுத்துவதாக அமைந்துவிடக்கூடாது என்பதில் நாம் சற்று கவனமாக இருக்க வேண்டும். அதே வேளையில் அன்னை மரியாளின் தியாகமும், பெயரும் நிச்சயம் போற்றப்பட வேண்டும்.

இன்றைக்கு நம் அனைவருக்குமே ஒரு மகிழ்ச்சியான நாள். மீண்டும், மீண்டும் கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டிய நாள். நம் தாய் அன்னை கன்னிமரியாளின் பிறந்த நாள். இன்றைக்கு உலகமெங்கிலும் இருக்கிற கத்தோலிக்கத் திருச்சபை அந்த தாயின் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுவதில் அகமகிழ்கிறது. எத்தனை சோதனைகள், எத்தனை தப்பறைக்கொள்கைகள், எத்தனை எதிர்ப்புக்கள் – இவற்றிற்கு நடுவில், நிச்சயம் அன்னை கன்னிமரியாள் மீது வைத்திருக்கிற மக்களின் பக்தி, நம்மை மகிழ்ச்சியடைய வைக்கிறது.

அகில உலக திருச்சபையின் தூணாக இருந்து, தனது செபத்தாலும், பரிந்துரையாலும் ஒவ்வொருநாளும் அன்னை கன்னிமரியாள் நம்மைச் சிறப்பாக வழிநடத்திக் கொண்டிருக்கிறார். இன்றைக்கு உலகமெங்கிலும் இருக்கிற ஆலயங்களில் அன்னை கன்னிமரியாளுக்குத்தான் அதிகம் என்கிற அளவுக்கு, அன்னை மரியாளின் மீது மக்கள் அளவுகடந்த பாசம் வைத்திருக்கின்றனர். இதற்கு அடித்தளமாக இருப்பது, அன்னை நம்மீது, தன் பிள்ளைகள் மீது வைத்திருக்கிற, நிரந்தரமான அன்பு. ஒரு தாயின் அன்பை நாம் ஒரு குறுகிய எல்கைக்குள் அடக்கிவிட முடியாது. அது அனைத்தையும் கடந்தது. எதனையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பண்புகொண்டது. தான் கற்றுக்கொண்ட மதிப்பீடுகளை, தன் மகன் இயேசுவுக்கும் ஊட்டி, அவரையும் இந்த உலகம், வரலாற்றைப்பிரிக்கக்கூடிய அளவுக்கு வலிமை மிகுந்தவராக எண்ண, காரணராக இருந்திருக்கிறார்.

அந்த தாயிடம் நம்மையே ஒப்படைப்போம். அவரிடத்தில் நமக்கு வேண்டியதைக் கேட்போம். அவர் நமக்கு நிச்சயமாக, தந்தையாகிய கடவுளிடமிருந்து, நமக்குத் தேவையானதைப் பெற்றுக்கொடுப்பார் என்கிற உறுதியான உள்ளத்தோடு, அன்னையின் பிறந்தநாளை மகிழ்வோடு கொண்டாடுவோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.