தூய கன்னி மரியாவின் அமலோற்பவம் பெருவிழா
அன்னையைப் போன்று அவதாரம் எடு!
லூக்கா 1:26-38
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் தூய அமலோற்பவ மாதா பெருவிழா திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
1858 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் நாள் பெர்னதெத் என்ற ஆடு மேய்க்கும் சிறுமி லூர்து நகரில் உள்ள மசபேல் குகைக்கருகில் நின்றுகொண்டிருந்தாள். அப்பொழுது திடிரென்று வெண்மையான ஆடை அணிந்த பெண் ஒருவர் அவருக்கு முன்பாகத் தோன்றினார். அவரைப் பார்த்த பெர்னதெத், “அம்மா உங்களுடைய பெயர் என்ன? என்று கேட்டார். அதற்கு அவர், “நாமே அமல உற்பவம்” என்று பதிலளித்தார்.
இன்று அன்னையாம் திருச்சபை மரியாளின் அமலோற்பவப் பெருவிழாவை மகிழ்வோடு கொண்டாடுகின்றது. இந்த நல்ல நாளில் முதலில் இவ்விழாவின் வரலாற்றுப் பின்னணியைத் தெரிந்துகொண்ட பின்பு, அது உணர்த்தும் செய்தியை நாம் தெரிந்துகொள்வோம். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் கீழைத் திருச்சபையில் ‘மரியாளின் உற்பவம்’ (The Conception of Mary) என்றதொரு விழா கொண்டாடப்பட்டு வந்தது. இவ்விழா மரியாளின் பிறப்பையும், அவரிடம் விளங்கிய நல்ல பண்புகளையும் பறைசாற்றுதாய் இருந்தது. படிப்படியாக இவ்விழா மேலைநாட்டு திருச்சபைக்கும் பரவியது.
கி.பி.பனிரெண்டாம் நூற்றாண்டில் இவ்விழா மரியாளின் மாசற்ற தன்மையும், தூய்மையையும் பறைசாற்றுவதாய் இருந்தது. அப்போதுதான் திருச்சபைத் தந்தையர்களிடையே மரியாளின் மாசற்ற தன்மையைப் பற்றிய விவாதம் எழுந்தது. மரியாள் கருவிலே பாவக்கறையின்றி பிறந்தால், அவர் கடவுளின் மீட்புத் திட்டத்திற்கு அப்பாற்பட்டவரா? என்பதுபற்றி பல்வேறு விவாதங்கள் எழுந்தன. இவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தாற்போல் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புனித டன்ஸ் ஸ்கோடஸ் என்பரின் வார்த்தைகள் அமைந்தன.
“மரியாள் கருவிலே ஜென்மப் பாவமின்றி பிறக்கக் காரணம் அவர் மாசு மருவற்ற இயேசுவைப் பெற்றெடுப்பதற்காக. அதலால், மரியாளின் அமலோற்பவம் இயேசுவின் பிறப்பை முன்னிட்டு, கடவுள் மரியாளுக்குக் கொடுத்த மிகப்பெரிய கொடை எனச் சொல்லலாம்” என்றார் அவர். அதன்பிறகு மரியாளைப் பற்றிய இத்தகைய சிந்தனை திருச்சபை எங்கும் பரவியது. மரியாள் லூர்து நகரில் தன்னை வெளிப்படுத்துவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக அதாவது 1854 ஆம் ஆண்டு திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர் “மரியாள் கருவிலே பாவக்கறை இன்றி தோன்றியவள்’ என்ற விசுவாசப் பிரகடனத்தை அறிக்கையிட்டார். அன்றிலிருந்து இன்றுவரை அவ்வாறே வழங்கப்பட்டு வருகின்றது.
அமலோற்ப அன்னை நமக்கெல்லாம் மிகச் சிறந்த உதாரணமாக திகழ்கிறாள். அந்த அன்னையைப் போன்று நாம் மாற வேண்டும். அதற்காக இரண்டு அவதாரங்களை நாம் எடுப்பது மிகவும் சிறப்பாக அமையும்.
1. தூய்மையின் அவதாரம்
இறந்த இயேசுவைத் தன் மடியில் ஏந்திய மரியாவைச் சிலையாக வடித்தவர் உலகப் பெரும் சிற்பி மைக்கேல் ஆஞ்சலோ. சிலைக்கு பியத்தா என்று பெயர். அவரது வேலைப்பாட்டினைப் பாராட்டிய ஒருவர் ஒரு குறையாகச் சுட்டிக்காட்ட விரும்பி, “ஐயா, அன்னை மரியாவின் முகத்தை நீர் செதுக்கிய விதத்தைக் காணும் போது, அது 33 வயது மகனுக்குத் தாயாக இருக்கக்கூடிய முதிய தோற்றம் இல்லாது, மிகவும் இளமையாக, சிறுபெண்ணின் முகம் போல் உள்ளதே” என்றாராம். அதற்கு மைக்கேல் ஆஞ்சலோ சொன்ன பதில் என்ன தெரியுமா? ”பாவமும் பாவச் சிந்தனையும் உள்ளவர்களுக்குத்தான் மூப்பின் தன்மை வெளிப்படும், அன்னை மரியாவோ பாவமாசற்றவள். பாவச் சிந்தனையற்று அதன் நிழல்கூட தன்னை தீண்டாமல் வாழ்ந்தவள். எனவே அவள் எப்பொழுதும் இளமையாகத்தான் இருப்பாள்”.
உலகில் அனைவரும் தூய்மையை விரும்புவதில்லை. பாவம் செய்வதற்கு பயப்படுவதில்லை. பாவம் செய்வது தவறு என்பது மனதில் அதிக அழுத்தம் பெறுவதில்லை. அப்படி வாழும் நம்மை இன்றைய விழா கண்டனம் செய்கிறது. அது தவறு என்கிறது. உடனே மாறச்சொல்கிறது. துருப்பிடித்து இருக்கும் தூய்மையை தட்டச் சொல்கிறது. பரிசுத்த வாழ்க்கைக்கு அழைக்கிறது. அன்னையைப் போன்று மாறச் சொல்கிறது. அவர்களைப் போல அவதாரம் எடுக்கச் சொல்கிறது.
2. வாய்மையின் அவதாரம்
உண்மையைப் பேசுபவர்கள் குறைவு. மிகவும் குறைவு. பொய்களின் கூட்டணி கூடிக்கொண்டே வருகிறது. இது உலகம் ஆபத்தான நிலையில் போய்க்கொண்டிருப்பதைக் காட்டுகிறது. இந்த அவலநிலையைப் போக்க இந்த நாள் நல்லநாள் அழைக்கிறது. அன்னை மரியாள் நம் தாய் வாய்மையின் வாசலாகத் திகழ்ந்தார்கள். அவர்களைப் போன்று நாம் வாய்மையை வாழ்வாக்க வேண்டும். அதற்காக அவதாரம் எடுக்க வேண்டும். வாய்மையின் அவதாரம் எடுக்க வேண்டும்.
மனதில் கேட்க…
1. அன்னை மரியைப் போன்று வாழ எனக்கு ஆசை உள்ளதா?
2. இரண்டு அவதாரங்கள் நான் எடுப்பது மிக அவசரமான தேவை அல்லவா?
மனதில் பதிக்க…
இதோ ஆண்டவரின் அடிமை, உம் சொற்படியே எனக்கு நிகழட்டும் (லூக் 1:38)
~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா