தூய கன்னி மரியாவின் அமலோற்பவம் பெருவிழா
மரியாள் தன் தாய் அன்னம்மாளின் வயிற்றில் இருக்கிறபோதே, கடவுளின் அருளால் பாவ மாசின்றி பாதுகாக்கப்பட்டிருந்தாள் என்பதுதான், இந்த விழாவின் மையப்பொருளாகும். இது மரியாளின் மாசற்ற உற்பவத்தின் உன்னதமான நிகழ்வை கூருகின்றது. இதற்கு விவிலிய ஆதாரம் ஏதும் இல்லை. இது ஒரு மறையுண்மை. இதை கி.பி 1854 ம் ஆண்டு, டிசம்பர் 08 ம் நாள் திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் ”மரியாள் அமல உற்பவ” என்ற அப்போஸ்தலிக்க மடலிலே பிரகடனப்படுத்தியுள்ளார். இது பெரும்பாலும் பாரம்பரியத்தையும், இறையியல் மற்றும் திருவழிபாட்டு மரபு அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டது ஆகும்.
மரியாள் கடவுளின் மகனைக் கருத்தாங்கியதால், மரியாளின் பிறப்புநிலையைப்பற்றி பல விவாதங்கள் எழுந்தன. இந்த கருத்து பரவத்தொடங்கியபோது, பல இறையியலாலர்கள் இதனை கடுமையாக எதிர்த்தனர். இறுதியில் இச்சிக்கலுக்கு கீழ்க்காணும் விளக்கம் மூலமாக தீர்வு காணப்பட்டது. டன்ஸ் ஸ்காட்டஸ் என்பவர் 1300 ம் ஆண்டு, கடவுளின் அருள் இரண்டுவிதங்களில் செயல்படுகிறது என ஒரு விளக்கம் கொடுத்தார். கடவுளின் காக்கும் அருள் மற்றும் கடவுளின் குணமாக்கும் அருள். அதன்படி, இறைவனின் மீட்புத்திட்டத்தை நிறைவேற்ற, பாவ மாசுகளில் இருந்து மரியாளை கடவுள் தனது காக்கும் அருளினால், மீட்டார். கிறிஸ்துவின் பொருட்டு மரியாளுக்கும் இது வழங்கப்பட்டிருக்கிறது. இது ஒரு சிறப்பு நிலையே என்று விளக்கமளிக்கப்பட்டது.
திருமுழுக்கு அருட்சாதனம் வழியாக நாமும் கடவுளின் அருளால், ஜென்மப்பாவத்திலிருந்து கழுவப்படுகிறோம். இழந்த அருளைப் பெற்றுக்கொள்கிறோம். மீண்டும் கடவுள் நம்மை தன் பிள்ளைகளாகச் சேர்க்கிறார். பெற்றுக்கொண்ட கொடைக்கு ஏற்ப, நமது வாழ்வை நாம் மாற்றி வாழ்வோம்.
கடவுளின் தூதர் மரியாளை வாழ்த்துகிறபோது, மரியாள் கலங்குகிறாள். “இந்த வாழ்த்து எத்தகையதோ” என்ற அச்சம் கொள்கிறாள். மரியாள் எதற்காக கலங்க வேண்டும்? கடவுளின் தூதரே அவரை வாழ்த்துகிறபோது, அவள் மகிழ்ச்சி தானே கொண்டிருக்க வேண்டும். அதை விடுத்து, அவள் கலங்குவது எதற்காக? என்ற கேள்வி நிச்சயம் நமது உள்ளத்திலே எழும்.
யார் நம்மைப் புகழ்ந்தாலும், அதிலே மகிழ்ச்சி அடைவதை விட, அதில் நாம் எச்சரிக்கை உணர்வு கொண்டிருப்பது மிக முக்கியமானதாகிறது. யார் நம்மைப் புகழ்கிறார்களோ அவர்கள் மட்டில் கொண்டிருக்க வேண்டிய எச்சரிக்கை உணர்வல்ல, நமது வாழ்வை இதே போன்று வாழ வேண்டும் என்கிற எச்சரிக்கை உணர்வு நமக்குத் தேவைப்படுகிறது. இதுவரை சிறப்பாக வாழ்ந்திருக்கிறோம். இனியும், மற்றவர்களின் நல்ல வார்த்தைகளுக்கு ஏற்ப, புகழ்ச்சிக்கு ஏற்ப, நமது வாழ்வை வாழ வேண்டிய பொறுப்புணர்வு இங்கே நமக்கு தேவைப்படுகிறது. அந்த பொறுப்புணர்வு, இவ்வளவு நாள் வாழ்ந்த வாழ்வை, இனிவரக்கூடிய நாட்களிலும் சிறப்பாக வாழ வேண்டிய, அந்த கடமையுணர்வுதான், மரியாளை கலங்கச் செய்கிறது. ஆனால், கபிரியேல் தூதர் ”அஞ்ச வேண்டாம், கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர்” என்று சொல்கிறார். அதாவது, நல்ல எண்ணங்களோடு வாழ்கிறபோது, அந்த வாழ்வை சிறப்பாக வாழ, கடவுளே நமக்கு துணைசெய்வார் என்பது, மரியாளின் வாழ்வில் வெளிப்படுகிறது.
நாம் நேர்மையோடு வாழ்கிறபோது, அந்த வாழ்வை மற்றவர்கள் அங்கீகரித்து பாராட்டுகிறபோது, நாம் கவலைகொள்ளத் தேவையில்லை. இதுநாள் வரை நம்மைக் காத்து வந்த தேவன், இனி வரக்கூடிய நாட்களிலும் கைவிட மாட்டார் என்கிற எண்ணத்தோடு நமது வாழ்வை நாம் வாழ்வோம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்