தூய எண்ணங்களை மனதில் விதைப்போம்
லேவியர் 11 ம் அதிகாரத்தில் தீட்டாகக்கருதப்படக்கூடிய விலங்குகளின் பட்டியல் கொடுக்கப்பட்டிருக்கிறது. யூதர்களுக்கு தூய்மை என்பது கண்ணும், கருத்துமாக கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று. எனவே, எவற்றை சாப்பிட வேண்டும்? எவற்றை சாப்பிடக்கூடாது? என்ற வரைமுறைகளை வகுத்திருந்தனர். எந்த அளவுக்கு இதில் கவனமாக இருந்தார்கள் என்றால், தீட்டான உணவைச் சாப்பிடுவதை விட சாவதே மேல் என்று பலர் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட நிகழ்வை நாம் மக்கபேயர் நூலில் பார்க்கலாம். இரண்டாம் மக்கபேயர் புத்தகத்தில் பன்றி இறைச்சியைச்சாப்பிடக் கட்டாயப்படுத்தப்பட்ட சகோதரர்கள் ஏழுபேர், பன்றி இறைச்சியைச்சாப்பிட்டு தங்களை தீட்டுப்படுத்துவதை விட சாவதே மேல் என்று தங்கள் உடலைப்பல்வேறு சித்திரவதைகளுக்குக் கையளித்ததையும், அவர்களை அவர்களின் தாய் ஊக்கப்படுத்தியதையும் நாம் வாசிப்பது இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.
ஆனால், இயேசு வெளியிலிருந்து சாப்பிடக்கூடிய உணவு அல்ல, மாறாக, மனித எண்ணத்திலிருந்து தோன்றும் தீய சிந்தனைகள் தான் மனிதனைத்தீட்டுப்படுத்துகின்றன என்று சொல்கிறார். எண்ணங்கள் தான் செயல்பாடுகளுக்கு அடிப்படை என்று சொல்வார்கள். நம் எண்ணங்கள் நல்ல எண்ணங்களாக இருந்தால், நம் செயல்பாடுகளும் நல்ல செயல்பாடுகளாக இருக்கும். நம் எண்ணங்கள் கெட்ட எண்ணங்களாக இருந்தால் நம் செயல்பாடுகளும் கெட்ட செயல்பாடுகளாக இருக்கும். பரிசேயர்களுடைய எண்ணங்கள் கெட்ட எண்ணங்களாக, மற்றவர்களுக்கு கெடுதிவிளைவிக்கும் எண்ணங்களாக இருந்தன. எனவேதான், அவர்கள் செய்வது அனைத்தும் மக்களுக்கு கெடுதியை விளைவித்துக்கொண்டிருந்தன. அவர்கள் அதைப்பற்றிக்கவலைப்படாமல், வெறும் சடங்கு சார்ந்தவற்றைத் தூக்கிப்பிடித்துக்கொண்டிருந்தனர். இயேசு இதைக்கண்டித்து, உள்ளத்தில் தூய்மையானவர்களாக வாழ அழைப்புவிடுக்கிறார்.
நம் எண்ணங்களை தூய்மையான எண்ணங்களாக வைத்திருக்க இறையருள் வேண்டுவோம். இறைவனின் அருளும், நமது முயற்சியும் இருக்கும்போது, உண்மையிலேயே நம் எண்ணங்களையும், சிந்தனைகளையும் நம்மால் தூய்மையானதாக வைத்திருக்க முடியும்.
~ அருட்பணி. தாமஸ் ரோஜர்