தூய உள்ளத்தோடு ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு காட்டுவோம்

கர்த்தருக்குள் அன்பான சகோதர, சகோதரிகளுக்கு நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள்.

இந்த உலகத்தில் வந்து பிறந்த ஒவ்வொருவருவரும் நிலைவாழ்வு பெற்றிட வேண்டுமாய் எல்லாம் வல்ல இறைவன் தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்.யோவான் 3:16. இப்பேற்பட்ட தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் அவர் சாயலாய் உருவாக்கப்பட்ட நாம் அவரின் வார்த்தைக்கு கீழ்படிந்து ஒருவரில் ஒருவர் ஊக்கமாய் அன்புக் கூர்ந்து தூய உள்ளத்தோடு ஆழ்ந்த அன்பு காட்டிடுவோம்.

பழைய ஏற்பாடு புத்தகம் விடுதலை பயணம் 21:23,24,25ல் வாசிப்போமானால் அதில் உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், பல்லுக்கு பல், கைக்கு கை,காலுக்கு கால், சூட்டுக்கு சூடு, காயத்துக்கு காயம் என அடுக்கிக்கொண்டே போகும் அளவுக்கு கடவுள் கட்டளை பிறப்பித்தார். அதே சமயம் புதிய ஏற்பாடு புத்தகம் மத்தேயு 5:38 லிருந்து வாசித்துப்பார்ப்போமானால் கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்  என்று சொல்லப்பட்டதை கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தை திருப்பி காட்டுங்கள். ஒருவர் உங்களுக்கு எதிராக வழக்கு தொடுத்து உங்கள் அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால் உங்கள் மேலுடையையும் அவர் எடுத்துக்கொள்ள விட்டு விடுங்கள். உங்களை ஒரு மைல் தூரம் வரக் கட்டாயப்படுத்தினால் அவரோடு இரண்டு மைல் தூரம் போங்கள். உங்களிடம் கேட்கிறவனுக்கு கொடுங்கள். கடன் வாங்க
விரும்புகிறவனுக்கு முகம் கோணாதீர்கள்.

அன்பானவர்களே! உங்கள் குடும்பத்தில் நீங்கள் ஒருவர் ஆண்டவரை ஏற்றுக்கொண்டு இருப்பீர்கள். மற்றவர்கள் அவரை அறியாமல் உங்களுக்கு எதிராக பல விதங்களில் கஷ்டங்கள் கொடுக்கலாம். அப்பொழுது ஆண்டவரின் வார்த்தையாகிய பட்டயத்தை நீங்கள் விரும்பும் வண்ணம் உபயோகித்து அவர்களுக்காக ஜெபியுங்கள். இதைதான் ஆண்டவர் விரும்புகிறார். அவர்களை விட்டு பிரிவதை ஒருநாளும் ஆண்டவர் விரும்புவதே இல்லை. சிலபேர் தவறாக புரிந்துக்கொண்டு அவர்களும் குழம்பி, நம்மையும் குழப்பிவிடுவார்கள்.  அதற்கு ஒருபோதும் இடம் தர வேண்டாம். ஒவ்வொரு குடும்பத்திலும் ஆண்டவர் ஜீவிக்கிறார். பிரிவினை என்பது சாத்தானின் வேலை. அவன்தான் பிரிவினையை உண்டு பண்ணுவான். நீங்கள் ஒவ்வொரு நாளும் வேதத்தை வாசித்து அதன்படி நடந்தால் ஆண்டவர் நமக்கு உறுதுணையாக இருந்து எல்லாப் பொல்லாப்பிலிருந்தும் நம்மை விடுவித்து காத்திடுவார். எல்லோருக்கும் ஒரே மாதிரியான சூழ்நிலை ஏற்படுவதில்லை. அவரவருக்கு தகுந்தாற்போல் மாறும். அப்பொழுது நீங்கள்தான் ஆண்டவர் கொடுக்கும் ஞானத்தோடு செயல்பட்டு பொறுமையை கையாள வேண்டும்.

உன்னைப்போல் பிறரை நேசி. உன்னை பகைக்கிறவர்களுக்கு அன்பு காட்டு. உன்னை துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுதல் செய்யுங்கள். அப்பொழுதுதான் நாம் விண்ணக தந்தையின் பிள்ளைகள் என்று அழைக்கப்படுவோம். மத்தேயு 5:43,44,45. நீங்கள் உங்கள்உடன் பிறந்த சகோதரர், சகோதரிகளுக்கு மட்டும் வாழ்த்துக்கூறுவீர்களானால் நீங்கள் மற்றவர்களுக்கு மேலாக செய்து விடுவதென்ன? பிற இனத்தாரும் இவ்வாறு தான் செய்கிறார்கள். ஆகையால் நம்முடைய பரலோகத் தேவன் நிறைவான அன்பை நம்மீது பொழிவதுபோல் நாமும் நிறைவுள்ளவர்களாய் பிறர்மீது அன்பு கூறுவோம். ஏனெனில் தன் சகோதரனில் அன்பு கொண்டவன் ஒளியிலே நிலைக்கொண்டிருக்கிறான். நாம் ஒருவரில் ஒருவர் அன்பாயிருப்போம். அன்பு தேவனால் உண்டானது. அன்புள்ள யாவரும் கடவுளால் பிறந்து அவரை அறிந்திருக்கிறோம். ஏனெனில் கடவுள் அன்பாய் இருக்கிறார். நாம் வாழ்வுபெறும் பொருட்டு கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது.

ஜெபம்

அன்பின் இறைவா! நீர் அன்பாகவே இருக்கிறீர். நீர் ஒவ்வொரு குடும்பத்தையும் நேசிக்கிறீர். உம்மைப்போல் பொறுமையோடு நடந்து முன்மாதிரியான வாழ்வை வாழ்ந்து உமது அன்பை நாங்கள் பிறர்க்கு வெளிப்படுத்த உதவி செய்யும். சாத்தான் கொண்டுவரும் எல்லா சோதனைகளிலும் இருந்து எங்களை விடுவித்தருளும். ஆராய்ந்து பார்க்காமல் யாரையும் குற்றம் சொல்லவோ, குறை காணவோ கூடாத படிக்கு எங்களுக்கு உமது ஆவியின் துணையை அளித்து எல்லோரையும் புரிந்து வாழ வழிகாட்டிடும். உம்மையில் சிலுவையில் அடித்தவர்களுக்காக நீர் உமது பிதாவிடம் “பிதாவே இவர்களுக்கு மன்னியும் என்று சொன்னதுபோல” நாங்களும் பிறரிடமும், எங்கள் குடும்பத்தாரிடமும் குற்றம் கண்டுபிடிக்காமல் விட்டுக்கொடுத்து வாழ கற்றுத்தாரும். ஏனெனில் அன்பு திரளான பாவங்களை மூடும்.அது கோபம் கொள்ளாது, பொறாமையும் கொள்ளாது. சகலத்தையும் நம்பும்,அந்த அன்பை நாங்களும் எங்கள் இதயத்தில் பெற்று நீர் விரும்பும் பிள்ளைகளாய் வாழ எங்களுக்கு ஒவ்வொரு நாளும் போதித்து காத்து,வழிநடத்தும். மீட்பர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் ஜெபம் ஏறேடுக்கிறோம் எங்கள் பரலோக தந்தையே!ஆமென்!!அல்லேலூயா!!!.

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.