தூய உள்ளத்தோடு என் இல்லத்தில் வாழ்வேன்
திருப்பாடல் 28: 2, 7 – 8a, 8b – 9
ஒரு மனிதருடைய வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்பதற்கு இன்றைய திருப்பாடல் ஒரு விளக்கத்தைத் தருகிறது. தூய்மையான உள்ளம் தான், வாழ்க்கைக்கான அடிப்படை என்கிற உயர்ந்த மதிப்பீட்டையும் அது கற்றுத்தருகிறது. தூய உள்ளத்தோடு வாழ வேண்டும் என்பது எளிதான காரியமல்ல. தூய உள்ளத்தோடு வாழ்வதற்கு நமக்குள்ளாக இருக்கிற தீய எண்ணங்களை நாம் மாற்ற வேண்டும். இருள் என்று எதுவும் கிடையாது. ஒளியில்லாத நிலை தான் இருள். கடவுள் இந்த உலகத்தைப் படைத்தபோது, அனைத்தும் நல்லதெனக் கண்டார். எனவே, இந்த உலகத்தில் தீயது என்று எதையுமே அவர் படைக்கவில்லை.
நன்மை இல்லாத நிலை வருகிறபோது, அது நமக்கு தீமையாகத் தோன்றுகிறது. இந்த தீய எண்ணம் நம்முடைய வாழ்வையே மாற்றிவிடுகிறது. இது நம்முடைய மகிழ்ச்சியையும், அமைதியையும் சிதைத்துவிடுகிறது. அடுத்தவரைப் பழிவாங்க வேண்டும் என்கிற எண்ணம் கொள்ளச்செய்கிறது. நன்மை செய்கிறவர்களைப் பழித்துரைக்கச் செய்கிறது. ஆக, தீய உள்ளம் தான், தீமையான செயல்களுக்கான ஆதாரமாக இருக்கிறது. இந்த தீய உள்ளத்தை மாற்ற வேண்டுமென்றால், தூய்மையான உள்ளத்தை நாம் நாட வேண்டும். தூய உள்ளத்தோடு வாழ்வது தான், கடவுள் விரும்புகிற வாழ்க்கை. அந்த வாழ்க்கையை வாழ்வதற்கு இந்த திருப்பாடல் நமக்கு அழைப்புவிடுக்கிறது.
நம்முடைய வாழ்வில் நாம் எப்போதும் தூய்மையான சிந்தனை உள்ளவர்களாக வாழ வேண்டும். நல்லவர்களோடு, தூய்மையான சிந்தனை உள்ளவர்களோடு நாம் வாழ்வது நம்முடைய எண்ணங்களை வலுப்படுத்தும். நல்ல சிந்தனை உள்ள மனிதர்களோடு வாழ, நாம் இறைவனிடம் மன்றாடுவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்