தூய உள்ளத்தோடு என் இல்லத்தில் வாழ்வேன்
திருப்பாடல் 101: 1 – 2a, 2c – 33b, 5, 6
தூய் உள்ளம் தான் கடவுள் ஒவ்வொரு மனிதரிடமிருந்தும் எதிர்பார்ப்பது ஆகும். இந்த உலகத்தில் வாழும் மனிதர்கள் மிகப்பெரிய பட்டங்களைப் பெற வேண்டும் என்றோ, அதிகாரத்திலும், செல்வச்செழிப்பிலும் வளர வேண்டும் என்றோ கடவுள் ஒருபோதும் விரும்பியது கிடையாது. அப்படி வாழ்கிறவர்கள் கடவுளுக்கு மகிழ்ச்சியைத்தரவும் முடியாது. கடவுள் மனிதர்களிமிருந்து விரும்புவது எல்லாம் தூய்மையான உள்ளம்.
இன்றைய திருப்பாடல் ஆசிரியரும் அதனை முழுமையாக உணர்ந்தவராக இந்த பாடலை எழுதுகிறார். திருப்பாடல் ஆசிரியரைப் பொறுத்தவரையில், ஆண்டவரைப் பற்றிய தவறான பார்வையை வைத்திருந்தார். எதிரி நாடுகளுக்கு எதிராக வெற்றி பெறுவதன் மூலம், கடவுளை மகிழ்விக்க முடியும். எவ்வளவு தவறுகள் செய்தாலும், பலிகள் மூலமும், வெற்றிகள் மூலமும் தன்னுடைய பாவத்தைக் கழுவி விட முடியும் என்று அவர் நினைத்திருந்தார். ஆனால், அது முற்றிலும் தவறானது என்பதை, வெகு விரைவாகவே உணர்ந்து கொண்டார். அந்த அனுபவப் பாடத்தைத்தான், இன்றைய திருப்பாடல் வரிகள் நமக்கு எடுத்துரைக்கிறது.
நம்முடைய வாழ்வில் நாம் ஒருபோதும், கடவுளை பணத்தாலும், பதவியாலும் மகிழ்ச்சிப்படுத்த முடியாது. உண்மையான மகிழ்ச்சியை தூய்மையான உள்ளம் தான் தர முடியும். அத்தகைய உள்ளத்தை ஆண்டவரிடத்தில் மன்றாட, இந்த திருப்பாடலை நாம் தியானிப்போம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்