தூய ஆவியின் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்வோம்.எபேசியர் 4:3.
அன்பார்ந்த சகோதர,சகோதரிகளுக்கு,நம்முடைய தேவனாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள்.
நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொருநாளும் தூய ஆவியால் நிரம்பி ஜெபித்து, ஆண்டவரின் சித்தத்தை அறிந்து அதன்படியே செயல்பட்டால் நம் வாழ்க்கையில் ஏற்படும் பலவிதமான கஷ்டங்களில் இருந்து நம்மை காத்துக்கொள்ள தூய ஆவியானவர் நமக்கு உதவி செய்வார். வீண்
வார்த்தைகளால் உங்களை யாரும் ஏமாற்றமுடியாது. ஏனெனில் நம்மில் இருக்கும் ஆவியானவர் இருளில் இருந்து காப்பாற்றி நம்மை ஒளியினிடத்தில் அழைத்து செல்பவராய் நமக்குள் வாசம் செய்கிறார். நமக்குள் இருப்பவர் உலகில் இருக்கும் எதிர்க் கிறிஸ்துவைவிடப் பெரியவர்.
யோவான் 4:4.
தூய ஆவியின் தூண்டுதல் தமக்கு இருக்கிறது என்று சொல்லும் யாவரையும் நம்பவேண்டாம். அந்த தூண்டுதல் கடவுளிடம் இருந்து வருகிறதா என்று சோதித்து பார்த்து அறிந்துக்கொள்ளுங்கள். ஏனெனில் போலியானவர்கள் உலகெங்கும் தோன்றியுள்ளார்கள். நீங்கள் அவரிடமிருந்து பெற்றுக்கொண்ட அருள்பொழிவினால் உங்களால் நன்கு கண்டுணரமுடியும். அந்த அருள் பொழிவினால் உண்மை எது? பொய் எது? என்று நன்கு கற்றுக்கொள்ளலாம். நீங்கள் கற்றுக்கொண்டதற்கேற்ப ஆண்டவரோடு இணைந்து வாழ்ந்து ஒருமைப்பாட்டைக் காத்துக் கொள்ளலாம்.
நம்முடைய கிறிஸ்து நேர்மையாளராய் இருந்து நேர்மையாவற்றை செய்வதுபோல் நாமும் பாவத்தை வெறுத்து பிசாசின் தந்திரங்களுக்கு எதிர்த்து நின்று நேர்மையாய் இருந்து கடவுளின் பிள்ளைகள் என்ற பெயரை எடுப்போம். ஏனெனில் கடவுளிடமிருந்து பிறந்தவர் எவரும் பாவம் செய்வதில்லை. ஏனெனில் கடவுளின் இயல்பு அவர்களிடம் இருக்கிறது.கடவுளிடமிருந்து பிறந்தவராயிருப்பின் அவர்களால் பாவம் செய்ய இயலாது. நேர்மையாய் செயல்படாதவரும், தம் சகோதரர், சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதவரும் கடவுளிடமிருந்து வந்தவர்களல்ல. இதனால் கடவுளின் பிள்ளைகள் யாரென்றும் பிசாசின் பிள்ளைகள் யாரென்றும் நமக்கு நன்கு புலப்படும். நாம் கண்ணால் காண்கிற நம்முடைய சகோதரர், சகோதரிகளிடம் அன்பும் ஒற்றுமையையும் காண்பிக்காமல் நம்மால் காணக்கூடாத கடவுளிடம் எப்படி அன்புக் கொள்ள இயலும். அப்பேர்பட்டவர்கள் தங்கள் நாவினால் பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் இருதயமோ தூரத்தில் உள்ளது. நம்முடைய ஆண்டவர் இருதயத்தை ஆராய்ந்து அறிகிறவராய் இருக்கிறார்.
அன்பானவர்களே! நாம் கிறிஸ்துவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் முன்பு நம்முடைய இதயத்தை ஆராய்ந்து பார்ப்போம். நாம் மற்றவர்களை குறைசொல்லிக்கொண்டு இருக்கிறோமா?அவ்வாறு சொல்ல நமக்கு என்ன தகுதி இருக்கிறது? அவர்களை குறை சொல்லும் நாம் அந்த தவறை செய்யாதபடிக்கு காத்துக்கொள்வோம். இந்த தவக்காலத்தின் மேன்மையை உணர்ந்து நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வாழ்ந்த முன் மாதிரியான வாழ்க்கையை நாமும் நன்கு உணர்ந்து செயல்பட்டு வாழ்ந்து கடவுளின் பிள்ளைகள் என்ற பெயரை எடுத்து அநேகரை ஆண்டவருக்குள் வழிநடத்துவோம்.
ஜெபம்
எங்கள் அன்பின் தெய்வமே!நீர் எங்களுக்கு காட்டிய பாதையில் நாங்கள் நடந்து ஒருவருக்கொருவர் ஒற்றுமையோடும் அன்போடும் நடந்து உமது அடிச்சுவட்டை பின்பற்றி நடக்க கற்றுத்தாரும். எங்கள் சகோதரர்,சகோதரிகளிடம் உண்மையான அன்போடும், பாசத்தோடும் நடந்து உமது பெயருக்கு மகிமை செலுத்த உதவிச் செய்யும். நாங்கள் எங்கள் கண்களால் காண்கிறவர்களை நேசிக்காமல் காணாத, காணமுடியாத உம்மை எப்படி நேசிக்க முடியும்.ஆகையால் நாங்கள் ஒருவருக்கொருவர் அன்போடு செயல்பட்டு உம்மைக் காண உதவி செய்யும். நீர் விரும்பும் பிள்ளைகளாய் வாழ எங்களுக்கு அனுதினமும் போதித்து எங்களை வழிநடத்தும். மீட்பர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம் எங்கள் அருமை தெய்வமே! ஆமென்!!அல்லேலூயா!!!