தூக்கியெறியப்பட்ட இடத்தில் தூக்கி நிறுத்துவார்
இ.ச.26:4-10, உரோ. 10:8-13, லூக். 4:1-13
தவக்காலத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமை வழிபாட்டு வாசகங்கள், சோதனைகளை எப்படி சாதனையாக்குவது என்பது பற்றி நமக்கு விளக்குகிறது. ஆண்டவர் இயேசு சோதிக்கப்பட அலகையினால் பாலைவனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்பதை இன்றைய நற்செய்தி விளக்குகிறது. நம்மை மீட்பதற்காக மனிதனாகப் பிறந்த மனுமகன் மனித இயல்பினால் சோதனைகளை எதிர்கொள்கிறார். அவருடைய திருமுழுக்கு நேர் மறையாகத் தன் பணியை நிறைவேற்ற தயாரிக்கிறது. ஆனால் இந்தப் பாலைவன அனுபவமோ அவரை மிகவும் கடினமான முறையில் அவரைத் தயாரிக்கின்றது. வரலாற்றுப் பக்கங்களைத் தூசித்தட்டிப் பார்த்தோமென்றால், போராட்டத்திற்குப் பிறகுதான் சுதந்திரம் அல்லது விடுதலை என்பதை அறிய முடிகிறது. அவருடைய இந்தப் பாலைவனப் போராட்டம் தொடர்ந்து கல்வாரி சிலுவைப் பாதையின் வழியாக விடுதலை வாழ்விற்கு களம் அமைத்துக் கொடுத்தது.
சோதனை என்பது அனைவருக்குமானது. சோதனை வருவதை நம்மால் தவிர்க்க இயலாது. தினமும் இந்தச் சோதனைகளைக் கடந்தால் தான் நம்மால் சாதிக்க முடியும். இதில் நன்றாகக் கவனிக்க வேண்டியது என்னவென்றால் ஆண்டவருக்கு உகந்தவர்கள் சோதனைகளை வெல்லுவார்கள். ஆண்டவருக்கு உகந்த வாழ்க்கை வாழாதவர்கள் சோதனைகளில் வீழ்ந்து விடுவார்கள். பழைய ஏற்பாட்டில் ஆபிரகாம் ஈசாக்கைப் பலியிட சோதிக்கப்பட்டார். வென்றார். (எபி – 11:17) யோபுவும் இதற்கொரு தலைசிறந்த உதாரணம். புதிய ஏற்பாட்டில் புனித. சூசையப்பர் மரியாவை யாருக்கும் தெரியாமல் விலக்கிவிட யோசித்த போதும் கடவுளின் தூதரைத் துணையாகக் கொண்டு அச்சோதனையை வென்றார். அன்னை மரியாவும் சோதனைகளைப் பலமுறை வென்றதை நம்மால் காணமுடியும்.
சோதனையில் நாம் வீழ்வதும், அதனை வெல்லுவதும் நாம் எடுக்கும் முயற்சியினைப் பொறுத்துதான் அமைகின்றது. நாம் ஆண்டவரின் சார்பாக நின்றால் நம்மால் சோதனையை வெல்ல முடியும். இயேசுவுக்கு வந்த முதல் சோதனை மிகவும் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான உணவினை மையமாகக் கொண்டது. அன்று பாலைவனத்தில் யாரும், எதுவும் இல்லாத இடத்தில் இயேசு பசியால் சோதிக்கப்பட்டார். தனது பசியைத் தீர்க்க அவரால் முடிந்தும் அவர் அதனைச் செய்யவில்லை. ஆனால் தன்னிடம் வந்த மக்கள் பசியோடு இருப்பதைக் கண்டு அவர்கள் மேல் பரிவு கொண்டார். மனிதனின் அடிப்படைத் தேவை பூர்த்தி செய்யப்படாமல் இருந்தால் மனிதன் எவ்வளவு துன்பப்படுவான் என்பதை நம் அனைவரையும்விட நன்கு அறிந்திருந்தார். ‘தனியொருவனுக்கு உணவில்லையெனில் செகத்தினை அழித்திடுவோம்’ என்ற மீசைக்கவியின் வரிகள் மனதைக் கிள்ளுகின்றன.
அடுத்து இயேசுவுக்கு வந்த சோதனை அதிகாரம், ஆட்சி, தன் உயர்வு. உலக அரசுகள் அனைத்தையும் காட்டித் தன்னை வணங்கினால் அவற்றைத் தருவதாக சாத்தான் அவரை சோதிக்கிறது. உலக அதிகாரமா? இறைவனின் திருவுளமா? என்ற மிகப்பெரிய சோதனையை இயேசு இறைவார்த்தையின் துணை கொண்டு துணிந்து கடக்கிறார். இதைப் போன்ற சோதனைகள் வேறு வழியிலும் இயேசுவின் இறப்பு வரையிலும் தொடர்கிறது. (காண்க மத்தேயு – 16:22) ஆனால் இவையனைத்திற்கும் இப்பாலைவனச் சோதனை அவருக்கு உதவிற்று. இறைவனைத் தவிர வேறு எந்த சக்திக்கும் சாத்தானுக்கும் தலைவணங்க மறுத்துவிட்டார். இன்று நாம், நம் அதிகாரம், ஆணவம் நம்மை ஆட்டிப் படைக்க விடுகிறோமா? அல்லது இறைவனே சரணாகதி என்று அவரைப் பணிகின்றோமா?
இறுதியாக, கடவுளையே சோதிக்குமாறு சாத்தான் இயேசுவை அழைக்கின்றது. நீ கீழே குதித்தால் உன் இறைவன் உன்னைத் தாங்குவாரா? என்று இயேசுவுக்கும் கடவுளுக்கும் இருந்த உறவினைச் சோதிக்க இயேசுவிற்கு ஆசையைத் தூண்டுகிறது. புதுமைகள் வழியே உயர்வை அடைவதற்கான சாத்தானுடைய சோதனையின் வேறு வடிவம் இது. இதே கேள்வியை இயேசு சிலுவையில் அறையப்பட்டிருக்கும் போது யூதர்கள் கேட்டார்கள். ‘நீ மெசியா என்றால் உன்னையே காப்பாற்றிக் கொள்’ என்று எள்ளி நகையாடினார்கள். இன்று நம்மிடையேயும் பலர் புதுமைகளை நம்பி மட்டுமே கோவிலுக்குச் செல்கிறோம். செபக் கூட்டங்களுக்குச் செல்கிறோம். இப்படிச் செல்பவர்கள் சாத்தானைப் போலவே நாமும் இயேசுவை சோதிக்கிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது.
நம் வாழ்வில் ஏற்படும் சோதனைகள் அனைத்தும் நம்மை நாமே சீர்தூக்கிப் பார்க்க அழைக்கின்றது. சோதனைகளின் போது நாம் பல்வேறு இழிநிலைக்கு ஆளாகலாம். பல்வேறு தோல்விகளைச் சந்திக்கலாம். அந்த நேரத்தில் யாரும் நம்மைப் புரிந்து கொள்ளவில்லையே என்றும் சிந்திக்கலாம். வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று கூட எண்ணலாம். ஆனால் நாம் சோதனையின் போது மனந்தளராமல் இயேசுவையும் அவரின் மதிப்பீடுகளையும் மட்டும் பற்றிப் பிடித்தோம் என்றால் இந்த உலகம் தூக்கி எறிந்த அதே இடத்தில், அதே நபர்களின் கண் முன்னே நம் ஆண்டவர் நம்மைத் தூக்கி நிறுத்துவார்.
திருத்தொண்டர் வளன் அரசு
Amen hallelujah