துளைத்த வாள்கள் மிரண்டு போனது…
வியாகுல அன்னையின் திருவிழா
யோவான் 19:25-27
இறையேசுவில் இனியவா்களே! வியாகுல மாதா திருவிழா திருப்பலியில் நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் பங்கெடுக்க வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம், வியாகுலத் தாயிடமும் மன்றாடுகிறேன்.
பிளாரன்ஸ் நகரைச் சேர்ந்த ஏழு வணிகர்களுக்கு அன்னை மரியாள் தனித்தனியே காட்சி தந்து செனாரியோ என்ற மலைக்கு வரும்படி அழைத்தார். அங்கே ஒன்று கூடிய எழுவரும் ஜெபிப்பதையும், வியாகுலங்களின் பக்தியைப் பரப்புவதையும், மக்களைப் பாவம், தீமையிலிருந்து விடுவிப்பதையும் தங்களது முதற்கடமையாகக் கொண்டிருந்தனர் .
அவர்களது வாழ்வு ஊழியக்காரியாகிய மரியன்னைக்கு ஊழியம் புரிவதாக இருந்ததால் அன்னை தாமே வெளிப்படுத்திய “மரியின் ஊழியர் ” என்ற பெயரையே அவர்கள் முழுவிருப்பத்துடன் தமதாக்கிக் கொண்டனர்.
இவ்வாறு துவங்கிய வியாகுல அன்னையின் பக்தி கி.பி.1814 இல் திருத்தந்தை 7ஆம் பத்திநாதர், நாடு கடத்தப்பதிலிருந்து மீளவும், உரோமை நகர் வந்தடைந்தமைக்கு நன்றியாக வியாகுல அன்னைக்கு விழா கொண்டாடும்படி அவர் இறைமக்களுக்கு மிகவும் அன்புடன் அறிவித்தார்
1. மரியைப் போல மாறு
வியாகுல அன்னை 2000 ஆண்டுகளுக்கு முன் இயேசுவின் சிலுவையருகில் நின்று இயேசுவின் துன்பத்தில் பங்கேற்றார் . இன்றைய நவீன கால சிலுவைகளாகிய வறுமை, பிணி, அறியாமை, வன்முறை, அடக்குமுறை , இயற்கையை அழித்தல் , பண்பாட்டுச் சீரழிவு, தேவையற்ற கலாச்சார மாற்றம் போன்ற சிலுவைகளில் அன்றாடம் மக்கள் அறையப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். எனவே இத்தகைய சிலுவைகளிலிருந்து மக்களை மீட்க ஒவ்வொரு கிறிஸ்தவனும் உறுதி எடுக்க வேண்டும் . இதுவே வீரத்தாயாம் வியாகுல அன்னைக்கு நாம் செய்யும் நன்றி வழிபாடாகும்
2. மரியைப் போல மாற்று
அன்னை மரியாள் ஏழு வியாகுலங்களை சந்தித்தார். அவர் சந்தித்த வியாகுலங்கள் அனைத்தும் மிரண்டு போகும் அளவுக்கு அவர் செய்தார். வியாகுலங்களை கண்டு அஞ்சாத அரசியாக நின்றாள். துணிந்து நின்றாள் ஆகவே வரலாற்றில் இன்று நிமிர்ந்து நிற்கிறாள். நாமும் அன்னையைப் போல வியாகுலங்களை ஏற்கும் பிள்ளைகளாக மாற வேண்டும். வியாகுலங்கள் நம்மை கண்டு மிரண்டு போகும்படியாக செய்ய வேண்டும்.
மனதில் கேட்க…
1. நான் இதுவரை யாருடைய துன்பத்தில் எல்லாம் பங்கெடுத்திருக்கிறேன்?
2. துன்பம் என்னைக் கண்டு மிரண்டு போகும் அளவுக்கு நான் வீறுடன் செயல்படலாமா?
மனதில் பதிக்க…
நானோ ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப் பற்றியும் ஒரு போதும் பெருமை பாராட்ட மாட்டேன் (கலா 6 : 14)
~அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா