துன்பத்தில் தாழ்ச்சி
வரலாற்றிலே, எத்தனையோ மனிதர்களுக்கு, சிலுவைச்சாவை பரிசாகக் கொடுத்திருக்கிறார்கள். இயேசுவைவிட கொடுமையான தண்டனையைக் கொடுத்திருக்கிறார்கள். இவர்கள்பட்ட பாடுகளைவிட இயேசுவின் பாடுகள் எவ்வாறு உயர்ந்தது என்கிற கேள்வி நம்முள் எழலாம். ஒருவேளை, இயேசு எந்தவித பாவமும் செய்யாதவர், இருந்தாலும் தண்டிக்கப்பட்டார், எனவே அவருடைய பாடுகளை நாம் நினைவுகூர்வது சாலச்சிறந்தது என்று நாம் பார்த்தோமென்றாலும்கூட, இயேசுவைப்போல் எத்தனையோ மனிதர்கள், தாங்கள் செய்யாத பாவங்களுக்காக, பொதுவாழ்விலே ஈடுபட்டதற்காக, அநியாயமாக தீர்ப்பிடப்பட்டு, தங்களுடைய உயிரை ஈகம் செய்திருக்கிறார்கள். இயேசுவினுடைய பாடுகள் ஒரே ஒருநாள். முந்தைய இரவு கைது செய்யப்படுகிறார். அடுத்தநாள் சிலுவையிலே அறையப்பட்டு இறந்து விடுகிறார். ஆனால், தொழுநோயினால், புற்றுநோயினால், காசநோயினால் வாழ்வு முழுவதும், உடல்வலியிலும், மனஉளைச்சலிலும், வாழ்ந்தும் இறந்துகொண்டிருக்கின்ற மனிதர்கள் மத்தியில், இயேசுவின் பாடுகள் எப்படி தனித்துவம் மிக்கதாக இருக்க முடியும் என்பதை நாம் சிந்தித்துப்பார்ப்போம்.
பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலே 2: 7 ல் பார்க்கிறோம்: ‘கிறிஸ்து தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு அதுவும் சிலுவைச்சாவையே ஏற்கும் அளவுக்கு கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்’. கிறிஸ்துவின் இந்த தாழ்ச்சி தான் அவருடைய பாடுகளை தனித்துவமிக்க ஒன்றாக காட்டுகிறது. இயேசு கடவுளின் மகன். இந்த உலகத்தையே படைத்து, பராமரித்துவரும் உன்னத தந்தையின் மகன். தந்தையாகிய கடவுள் நினைத்திருந்தால், இந்த உலகத்தை ஒரு நொடிக்குள் மாற்றியிருக்க முடியும். அல்லது, இந்த உலகத்தை அழித்துவிட்டு புதிய உலகத்தை உருவாக்கியிருக்க முடியும். ஆனால், இந்தப்பூமியை இருளின் ஆட்சியிலிருந்து மீட்பதற்காக, தன் ஒரே மகனையே கையளிக்கத் திருவுளமானார். அதற்கு இயேசுவும் தன்னையே தாழ்த்திக்கொண்டார். வெறுமனே அதை தாழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டதோடு நில்லாமல், இந்தப்பூமியில் வாழ்ந்த ஒவ்வொரு நிமிடமும், அதை செயல்படுத்தினார். ‘தந்தையே! உம் கரங்களில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்’ என்று நிறைவாக கடவுள் தனக்கு தந்த பணியை, செய்துமுடித்தார். இதுதான் கிறிஸ்துவின் பாடுகளை தனித்துவமிக்க ஒன்றாக அடையாளம் காட்டுகிறது.
தாழ்ச்சியில் தான் கடவுள் மீது நாம் வைத்திருக்கிற விசுவாசத்தின் ஆழம் வெளிப்படுகிறது. தாழ்ச்சியில் தான் கடவுளின் வல்லமை வெளிப்பட இருக்கிறது. அப்படிப்பட்ட தாழ்ச்சியை நாம் நம் வாழ்வின் அணிகலனாகக்கொள்ள அழைக்கப்படுகிறோம். குறிப்பாக, துன்பங்கள் வருகின்றபோது தாழ்ச்சியாக ஏற்றுக்கொள்ளும்போது, கடவுளின் மாட்சி நம் வழியாக வெளிப்படும். அத்தகைய தாழ்ச்சியை இறைவனிடம் கேட்போம்.
– அருட்பணி. தாமஸ் ரோஜர்