துன்பத்தின் வழியாகவும் நற்செய்தி அறிவிப்பு!
மாற்கு நற்செய்தியாளரின் விழாவாகிய இன்று நமது நற்செய்தி அறிவிப்புக் கடமையைப் பற்றிச் சிறிது சிந்திக்க அழைப்பு விடுக்கிறது திருச்சபை.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” என்று கட்டளையிடுகிறார். நற்செய்தி அறிவிப்பின் அடையாளங்களையும் ஆண்டவர் பட்டியல் இடுகிறார். அவற்றில் முகாமையான ஒன்று உடல் நலமற்றோரைக் குணமாக்குவது. நோயுற்றோருக்காகப் பரிந்து மன்றாடி அவர்களை நலம்பெறச் செய்வது ஒரு நற்செய்தி அறிவிப்பு உத்தி.
அதே வேளையில், முதல் வாசகத்தின்படி, “சிறிது காலத் துன்பங்களுக்குப் பின் அவர் உங்களைச் சீர்படுத்தி, உறுதிப்படுத்தி, வலுப்படுத்தி நிலைநிறுத்துவார்” என்னும் செய்தியின் வழியாக பேதுரு, துன்பத்தின் வழியாகவும் நாம் நற்செய்தி அறிவிக்க முடியும் என ஊக்குவிக்கிறார்.
எனவே, நோயுற்றோருக்காக மன்றாடுவதோடு, அவர்கள் நலம் பெற இயலாவி’ட்டால், அத்துன்பத்தைப் பொறுத்துக்கொள்வதன் வழியாக சான்று பகரும் வாய்ப்பினை அவர்கள் பெறுகின்றனர் என்னும் செய்தியையும் நாம் பகிர்ந்துகொள்வோம்.
மன்றாடுவோமாக: உயிர்த்த மாட்சி மிகு இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். இறைவா என்ன நேர்ந்தாலும் நன்றி கூறி, உமக்கு சான்று பகர்ந்து, நற்செய்தி அறிவிக்கும் பேற்றினை எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
அருள்பணி. குமார்ராஜா