துணிவோடு வாழ…
கிறிஸ்தவர்களாகிய நமக்கு துணிவு முக்கியம். அந்த துணிவு நம் அனைவருக்கும் இருக்க வேண்டும், என்று துணிவோடு வாழ அழைப்பதுதான் இன்றைக்கு நாம் வாசிக்கிற நற்செய்தி நமக்குத்தருகிற செய்தியாக இருக்கிறது. பல வேளைகளில் நம் கண்முன்னால் அநீதி நடக்கிறபோது, நமக்கு ஏன் வம்பு? என்று ஒதுங்கிச்செல்கிறோம். விவேகமாக நடந்து கொள்வதாக நாம் எண்ணுகிறோம். ஆனால், அது தவறு. நமது பொறுப்பை நாம் தட்டிக்கழிக்கிறோம். நமது கடமையை நாம் செய்யத்தவறுகிறோம் என்பதுதான் இதனுடைய அர்த்தமாக இருக்க முடியும்.
இயேசு தனது போதனைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக வாழ்ந்திருக்கிறார். அவரது வாழ்க்கையில் எது தவறு என்பதை அவர் அறிந்தாரோ, அதனைத்துணிவோடு எதிர்த்து நின்றார். எது சரி என்று அவர் நினைத்தாரோ, அதனைத் துணிவோடு செய்தார். ஆக, தவறை, தவறு என்று சுட்டிக்காட்டுவதற்கும், சரியை, சரி என்று செய்வதற்கும், அவருக்கு துணிவு இருந்தது. அந்த துணிவு நமக்கும் இருக்க வேண்டும். இன்றைய உலகில் தவறு என்பது தெரிந்தும், நாம் சுட்டிக்காட்ட தவறுகிறோம். சரி என்பது அறிந்தும், உடனிருக்க பயப்படுகிறோம். இது சரியான கிறிஸ்தவ வாழ்வாக இருக்க முடியாது.
கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்வதற்கு நமக்கு அடிப்படையில் துணிவு இருக்க வேண்டும். ஏனென்றால், கிறிஸ்தவ வாழ்வு சாதாரண வாழ்வல்ல. அது சவாலான வாழ்வு. அந்த வாழ்வை, துணிவுள்ளவர்கள் மட்டும் தான் சிறப்பாக வாழ முடியுமே தவிர, எல்லாராலும் அதனை சிறப்பாக வாழ்ந்துவிட முடியாது. நாம் துணிவோடு வாழ்கிறவர்களாக இருப்போம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்