தீர்ப்பளிக்கும் வார்த்தை!
இயேசு உலகைத் தீர்ப்பிட வரவில்லை. அதை மீட்கவே வந்தார். ஆனால், அவரது வார்த்தைகள் தீர்ப்பளிக்கின்றன என்கிறார் இயேசு. ஆம், சற்று சிந்தித்துப் பார்த்தால் வியப்பு தரும் செய்தி இது.
இயேசுவின் வார்த்தைகள் ஆறுதல் தருகின்றன. வாழ்வு தருகின்றன. நலம் தருகின்றன. வழிகாட்டுகின்றன. அத்துடன், தீர்ப்பிடவும் செய்கின்றன. இயேசுவின் வார்த்தைகளைக் கேட்கிற எவரும் ஒன்றில் அவ்வார்த்தைகளின்படி நடக்க வேண்டும். அல்லது அந்த வார்த்தைகளைப் புறக்கணித்து, அவற்றிற்கு மாறாக வாழ வேண்டும். இவை இரண்டில் ஒன்றைத்தான் செய்ய முடியும். இரண்டுமே ஒரு வகையான தீர்ப்புதான். வார்த்தையின்படி வாழ்கிறவர்கள் நல்ல தீர்ப்பைப் பெறுகிறார்கள். பாராட்டப்படுகிறார்கள். வார்த்தைக்கு மாறாக, எதிர் சான்றாக வாழ்பவர்கள் கெட்ட தீர்ப்பைப் பெறுகிறார்கள். வாழ்வை இழக்கிறார்கள். தீர்ப்பளிக்கும் இறை வார்த்தை பற்றி எச்சரிக்கையாய் இருப்போம்.
மன்றாடுவோம்: முடிவில்லா வாழ்வு தரும் வார்த்தைகளின் ஊற்றான இயேசு ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். உமது வார்த்தையின்மீது நாங்கள் ஆர்வம் கொண்டு, அவற்றின்படி நடந்து உமக்குப் புகழ் சேர்ப்போமாக. உமது வார்த்தைகள் எங்களைத் தீர்ப்பிடாதபடி எங்களைக் காத்தருளும் ! உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்
~ அருட்தந்தை குமார்ராஜா