தீமைக்கு விடைகொடு … கடவுளின் துயருக்கு பதில்கொடு
மத்தேயு 11:20-24
பழைய ஏற்பாட்டில் கடவுள் கவலையடைந்தார். மனம் வருந்தினார். அவரது உள்ளம் துயரமடைந்தது. இதை தொடக்கநூல் 6:5-6 வரையுள்ள இறைவார்த்தைகளில் வாசிக்கிறோம், “மண்ணுலகில் மனிதர் செய்யும் தீமை பெருகுவதையும் அவர்களின் இதயச் சிந்தனைகளெல்லாம் நாள் முழுவதும் தீமையையே உருவாக்குவதையும் ஆண்டவர் கண்டார். மண்ணுலகில் மனிதரை உருவாக்கியதற்காக ஆண்டவர் மனம் வருந்தினார். அவரது உள்ளம் துயரமடைந்தது”.
புதிய ஏற்பாட்டில் குறிப்பாக இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து கவலையடைகிறார். மனம் வருந்துகிறார். உள்ளம் உடைந்துப்போகிறார். கொராசின், பெத்சாய்தா மற்றும் கப்பர்நாகும் நகர்களில் தீமை பெருகியதையும் அவர்களின் இதயச் சிந்தனைகளில் நாள் முழுவதும் தீமை உருவானதையும் அவர் கண்ணாரக் கண்டதால் கலங்கி நிற்கிறார். அவர்கள் வாழ்வில் முன்னேற்றம் காண்பார்கள் என்பதற்காக ஆண்டவர் இயேசு கிறிஸ்து பல வல்ல செயல்களை அந்நகர்களில் செய்தார். அவையெல்லாம் பலனில்லாமல் போயிற்று. அவருடைய எதிர்பார்ப்பு எல்லாம் எரிந்து சாம்பலானது.
நம் ஒவ்வொருவரையும் வரலாறு படைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே கடவுள் இவ்வுலகில் படைத்திருக்கிறார். அதற்காக பல வல்ல செயல்களை நம் வாழ்வில் செய்கிறார். நாம் அவற்றையெல்லம் உணராமல் தீமையை நம் வாழ்வில் வளர விடும்போது அந்த வரலாறு படைக்க வேண்டும் என்ற எண்ணம் வலுவிழந்து போகிறது. நாம் படைக்கப்பட்ட நோக்கம் பலனற்றுப்போகிறது. கடவுள் எதிர்பார்த்தது நடக்காமல் எல்லாமே முடிந்து போகிறது.
மனதில் கேட்க…
• தீமைக்கு விடை கொடுக்கும் நாள் இதுதானே?
• கடவுளின் துயருக்கு பதில்கொடுத்து பலன்கொடுக்கும் நாளும் இதுதானே?
மனதில் பதிக்க…
என் தீவினை முற்றிலும் நீங்கும் படி என்னைக் கழுவியருளும் என் பாவம் அற்றும்போகும்படி என்னைத் தூய்மையாக்கும்(திபா 51:2)
– அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா