தீட்டு மனிதருக்கு உள்ளேதான்…
தீண்டாமை என்னும் பாவம் இன்றும்கூட நமது சமூகத்தில் பழக்கத்தில் உள்ளது. வெவ்வேறு வடிவங்களில் அது தன்னை வெளிப்படுத்துகிறது. குறிப்பிட்ட மனிதரைத் தொடுவதோ, அவர்களோடு உண்டு, உறவாடுவதோ நம்மைத் தீட்டுப்படுத்துகிறது என்று எண்ணும் மக்கள் இந்த நூற்றாண்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். சாதிய வெறியும், சாதிய உணர்வும் (இரண்டும் அடிப்படையில் ஒன்றுதான், வெளிப்பாட்டில்தான் வேறுபாடு) கொண்ட கிறித்தவர்களும் இன்னும் இருக்கிறார்களே, பின் தீண்டாமையைக் கடைப்பிடிப்போரை நாம் எப்படிக் குறை சொல்ல முடியும்.
“வெளியேயிருந்து மனிதருக்குள்ளே செல்லும் எதுவும் அவர்களைத் தீட்டுப்படுத்த முடியாது” என்கிறார் ஆண்டவர் இயேசு. எனவே, மனிதரில் சாதிய உணர்வோ, உணவில் விலக்கோ கொள்ளவேண்டிய தேவையில்லை. எல்லா உணவுப்பொருள்களும் தூயன என்று பொருள் கொள்கிறார் நற்செய்தியாளர். எல்லா மனிதருமே மாண்பு மிக்கவர்கள், சமத்துவம் மிக்கவர்கள் என்று இன்று நாம் பொருள்கொள்ள வேண்டும். “மனிதருக்கு உள்ளேயிருந்து வருவதே அவர்களைத் தீட்டுப்படுத்தும்” என்கிறார் இயேசு. பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு ஆகியவற்றைச் செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் உள்ளத்திலிருந்தே வருகின்றன என்று அவற்றைப் பட்டியல் இடுகிறார் இயேசு. காமவெறி போல சாதிவெறியும் மனிதரின் உள்ளத்திலிருந்துதான் வெளிவருகிறது.
உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவோம். ஒற்றுமையோடு வாழ்வோம்.
மன்றாடுவோம்: உலகின் ஒளியாக உம்மை வெளிப்படுத்திய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உள்ளத்தைத் தொடும் உமது வார்த்தைகளுக்காக நன்றி. எங்கள் உள்ளத்தைத் தூய்மைப்படுத்தி சாதிவெறியிலிருந்தும், சாதீய உணர்வுகளிலிருந்தும் எங்களை விடுவித்தருளும்! உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
~ பணி. குமார்ராஜா