திருவிவிலியத்தை தியானி… மாறுவாய் நீ ஞானி…
லூக்கா 8:4-15
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
“கடவுள் யாரென்று அறிந்துக்கொள்ள திருவிவிலியத்தை படித்தேன். அது நான் யாரென்று காட்டியது” என்று பெரியவர்கள் மிகவும் அருமையாகச் சொல்வார்கள். திருவிவிலியத்தை வாசித்து தியானிக்க தியானிக்க நாம் நாம் சுத்தமாக்கப்படுகிறோம், புதுப்பிக்கப்படுகிறோம். திருவிவிலியம் நம்மை ஞானியாக மாற்றும் ஏணி என எழிலுற, அழகுற அருமையான கருத்துக்களை சுமந்து வருகிறது இன்றைய நற்செய்தி வாசகம். நாம் ஞானியாக மாற மறந்துவிடாமல் இரண்டு செயல்பாடுகளை செய்ய வேண்டும்.
1. தொடு
திருவிவிலியத்தை தினமும் எனது கரங்களால் தொட வேண்டும். இதன் அர்த்தம் என்ன? தினமும் திருவிவிலியத்தோடு என் தொடர்பு இருக்க வேண்டும். வாசித்து நான் கடவுளோடு பேச வேண்டும். நம் நன்றியை வெளிப்படுத்த வேண்டும். திருவிவிலியத்தை வாசித்து அவரது பேரன்பை நினைத்து போற்ற வேண்டும்.
2. தேடு
நம் வாழ்விற்கான கஞ்சியம் திருவிவிலியம். இந்த களஞ்சியத்தில் நாம் நல்வழியில் நடப்பதற்கான அத்தனை ஆசீ்ர்வாதங்களும் பொதிந்துக் கிடக்கின்றன. அவற்றைத் தேடி ஆன்மாவை ஆனந்தத்தோடும் ஆர்ப்பரிப்போடும் வைத்துக்கொள்ள வேண்டும். இதுவே நம்மை ஞானியாக்கும்.
மனதில் கேட்க…
1. திருவிவிலியம் வாசிப்பதில், தியானிப்பதில் எனக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவு என்ன?
2. திருவிவிலியம் வாசித்து தியானித்து ஞானியாக மாறி வாழ்க்கையை கொண்டாடலாமே?
மனதில் பதிக்க…
கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது. ஆற்றல் வாய்ந்தது. இருபக்கமும் வெட்டக் கூடிய எந்த வாளினும் கூர்மையானது(எபி 4:12)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா