திருவிருந்துக்கு தினமும் செல்கிறீர்களா?
மத்தேயு 22:1-14
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் இத்திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
உடலுக்கு தினமும் உணவு உண்கிறோம். மூன்று வேளை உணவு உண்கிறோம். ஏதாவது நோய் என்றால் மருத்துவரை சந்திக்கிறோம். இப்படி உடலை மிகவும் கவனமாய் கவனிக்கிறோம். இன்றைய நற்செய்தி வாசகம் உடலைக் கவனிக்கிற நீங்கள் ஆன்மாவை கவனித்தீர்களா? ஆன்மாவிற்கான உணவு வழங்கினீர்களா? என்ற கேள்விகளோடு வருகிறது.
திருமண விருந்து என்பது திருவிருந்து
திருமண விருந்தாகிய திருவிருந்துக்கு நாம் எல்லோருமே அழைக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் நம்மில் பலர் பல சாக்குப்போக்குகளைக் கூறுகிறோம். கடவுள்தான் 24 மணிநேரத்தை கொடுத்தது அவருக்கு ஒரு அரை மணி நேரம் அல்லது ஒரு மணிநேரம் கொடுக்க நம்மால் இயலவில்லை. பெரும்பாலும் வார திருப்பலிக்கு வருவதில்லை. இது சரியா? திருத்தலாமா நம்மை.
தினமும் ஆன்மாவிற்கு உணவு கொடுங்கள்
தினமும் ஆன்மாவை மிகவும் கவனமாக கவனிக்க வேண்டும். இல்லையென்றால் அது பாதிப்படைகிறது. பழுதடைகிறது. சோதனைகள் வந்து சிதைக்கின்றன. வேதனைகள் வந்து வாட்டி வதைக்கின்றன.
மனதில் கேட்க…
1. திருப்பலிக்கு இனி நான் தினமும் வருவேனா?
2. கடவுள் கொடுத்த 24 மணிநேரத்தில் அவருக்கென்று நான் கொடுக்கும் நேரம் எவ்வளவு?
மனதில் பதிக்க…
அழைப்புப் பெற்றவர்கள் பலர், ஆனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களோ சிலர் (மத் 22:14)
~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா