திருவிருந்தில் பிளவுகள் !
திருவிருந்தின்போது எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்னும் பவுலடியாரின் அறிவுரை அன்றைய கொரிந்து நகரக் கிறித்தவர்களுக்கு எவ்வளவு பொருந்தியதோ, அதே அளவு இன்றைக்கும் பொருத்தமானதாக, பொருளுள்ளதாக இருக்கிறது என்பது ஒரு வேதனையான உண்மை. அன்றைய நாள்களில் ஒற்றுமையின் விருந்தான திருவிருந்தில் பிளவுபட்ட மனதினராய், தகுதியற்ற உள்ளத்தினராய் கலந்துகொண்டனர். இன்றும்கூட சாதி உணர்வு, பகை உணர்வு, ஏற்றத்தாழ்வுகள் அத்தனை இருந்தும், எந்தவித உறுத்தல் உணர்வும் இன்றி ஆயிரக்கணக்கான கிறித்தவர்கள் திருவிருந்தில் பங்குபெற்றுக்கொண்டுதான் இருக்கிறோம். கடவுளின் திருச்சபையை இழிவுபடுத்தி, இல்லாதோரை இழிவுபடுத்தும் செயலில் இன்றும் நாம் ஈடுபட்டுவருகிறோம். இதை நாம் உணர்கிறோமா? பவுலின் கடினமான சாட்டையடிச் சொற்கள் நம்மைச் சுடட்டும். நற்கருணை அருள்சாதனத்தில் நமக்கு உண்மையான நம்பிக்கை இருந்தால், நமது தகுதியின்மையை ஏற்றுக்கொண்டு மன்னிப்பு கோர வேண்டும். திருவிருந்தின் முரண்பாடுகளைக் களைய வேண்டும்.
மன்றாடுவோம்: வானக உணவாக உம்மையே எங்களுக்குத் தந்த இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உமது ஒற்றுமையின் விருந்தில் பிளவுபட்ட உள்ளத்தினராய், சாதி, சமத்துவமற்ற உணர்வுகளோடு கலந்துகொண்டதற்காக வருந்துகிறோம். எங்களை மாற்றும். எங்களின் தகுதியின்மையைப் போக்கும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
அருள்தந்தை குமார்ராஜா