திருமுழுக்கு யோவானின் வாழ்க்கை
திருமுழுக்கு யோவானைப் பற்றிய சான்று பகர்தலின் வெளிப்பாடு தான் இன்றைய நற்செய்தி வாசகம். திருமுழுக்கு யோவான் மனமாற்றத்திற்காக தன்னுடைய உயிரையே அர்ப்பணித்தவர். மக்கள் மனம்மாற வேண்டும், மக்களை ஆளும் மன்னன் மனம்மாற வேண்டும். தீய வழிகளை விட்டுவிட்டு, கடவுளின் அரசில் அவர்கள் நுழைய வேண்டும் என்பதற்காக, தனது வாழ்வையே அர்ப்பணித்தவர். அதற்காக தவவாழ்க்கையை வாழ்ந்தவர். அவரைப்பற்றி இயேசு மக்களுக்குப் போதிக்கிறார்.
பொதுவாக இயேசு தனது போதனையில் தன்னைப்பற்றியோ, அடுத்தவரைப்பற்றியோ மிகுதியான வார்த்தைகளைப் பேசுவது கிடையாது. வெறும் பெயருக்காகவோ, புகழுக்காகவோ, தற்பெருமைக்காகவோ இயேசுவின் போதனை அமைந்தது இல்லை. ஆனால், இன்றைய நற்செய்தியில் அப்படிப்பட்ட இயேசு, திருமுழுக்கு யோவானைப் புகழ்ந்து கூறுகிறார் என்றால், எந்த அளவுக்கு யோவானின் வாழ்க்கை அமைந்திருந்தது என்பதை இது வெளிக்காட்டுகிறது. இது இயேசு, யோவானுக்கு கொடுத்த மணிமகுடம். யோவானின் நல்ல வாழ்வை, தவ வாழ்வை, புனிதமிக்க வாழ்வை அங்கீகரிப்பதற்கான போதனை.
நமது வாழ்வில் நல்லது செய்கிறவர்களையும், மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டான வாழ்வை வாழ்கிறவர்களையும் நாம் அங்கீகரிக்க வேண்டும். அவர்களுக்கு எப்போதும் நாம் உடனிருக்க வேண்டும். அதனை இயேசுவிடமிருந்து நாம் கற்றுக்கொள்வோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்