திருமுழுக்கு யோவானின் வாழ்க்கை
திருமுழுக்கு யோவானைப் பற்றிய சான்று பகர்தலின் வெளிப்பாடு தான் இன்றைய நற்செய்தி வாசகம்(லூக்கா 7:24-30). திருமுழுக்கு யோவான் மனமாற்றத்திற்காக தன்னுடைய உயிரையே அர்ப்பணித்தவர். மக்கள் மனம்மாற வேண்டும், மக்களை ஆளும் மன்னன் மனம்மாற வேண்டும். தீய வழிகளை விட்டுவிட்டு, கடவுளின் அரசில் அவர்கள் நுழைய வேண்டும் என்பதற்காக, தனது வாழ்வையே அர்ப்பணித்தவர். அதற்காக தவவாழ்க்கையை வாழ்ந்தவர். அவரைப்பற்றி இயேசு மக்களுக்குப் போதிக்கிறார்.
பொதுவாக இயேசு தனது போதனையில் தன்னைப்பற்றியோ, அடுத்தவரைப்பற்றியோ மிகுதியான வார்த்தைகளைப் பேசுவது கிடையாது. வெறும் பெயருக்காகவோ, புகழுக்காகவோ, தற்பெருமைக்காகவோ இயேசுவின் போதனை அமைந்தது இல்லை. ஆனால், இன்றைய நற்செய்தியில் அப்படிப்பட்ட இயேசு, திருமுழுக்கு யோவானைப் புகழ்ந்து கூறுகிறார் என்றால், எந்த அளவுக்கு யோவானின் வாழ்க்கை அமைந்திருந்தது என்பதை இது வெளிக்காட்டுகிறது. இது இயேசு, யோவானுக்கு கொடுத்த மணிமகுடம். யோவானின் நல்ல வாழ்வை, தவ வாழ்வை, புனிதமிக்க வாழ்வை அங்கீகரிப்பதற்கான போதனை.
நமது வாழ்வில் நல்லது செய்கிறவர்களையும், மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டான வாழ்வை வாழ்கிறவர்களையும் நாம் அங்கீகரிக்க வேண்டும். அவர்களுக்கு எப்போதும் நாம் உடனிருக்க வேண்டும். அதனை இயேசுவிடமிருந்து நாம் கற்றுக்கொள்வோம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
யோவானிலும் பெரியவர்...
மனிதராய்ப் பிறந்தவர்களுள் யோவைனை விடப் பெரியவர் ஒருவருமில்லை. ஆனால் இறைஅரசில் பங்குபெறும் சிறியவர் யோவானை விடப் பெரியவர்”. திருமுழுக்கு யோவானை உயர்த்திபேசும் ஆண்டவர் அதே வேளையில் கடவுளின் அரசில் செல்லத் தகுதிபெறுபவர் அவரினும் பெரியவர் என்று குறிப்பிடுகிறார். யார் இந்த யோவான்? அவருக்கு நேர்ந்த கதி என்ன? இயேசுவின் வருகைக்காக மக்களை தயார் செய்தவர். கடவுள் அவருக்குக் கொடுத்த பணியைத் திறம்படச் செய்தவர். இறைவாக்கினருக்கு சிறந்த மாதிரியாய் செயல்பட்டவர். ஏரோது அரசன் தன் சகோதரன் மனைவியை வைத்திருத்தலாகாது என்று இடித்துரைத்தவர். அவ்வாறு சொன்னதற்காக சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் சிரசேதம் செய்யப்பட்டு உண்மைக்கு சாட்சியாக வாழ்து மரித்த இறைவாக்கினர்.
இயேசுவின் போதனைகளை வாழ்ந்து காட்டிய யோவான் உண்மைக்காக கொல்லப்பட்டிருக்கிறார். விசுவாச வாழ்வில் உண்மைக்கு சாட்சியம் பகர்ந்தவர்கள், நேர்மையோடும் நீதியின்படியும் வாழ்ந்தவர்கள், தங்கள் நலனில் அக்கறை கொள்ளாமல் பிறருக்காக வாழ்ந்த அநேக விசுவாசிகள் இன்னல்கள் பட்டதும் கிறிஸ்துவின் கொள்கைகளுக்காக உயிர் துறந்தவர்;களும் ஏராளம். அவர்களில் சிலர் இன்று புனிதர்களாக நம் மத்தியில் அறிவிப்பட்டிருக்கிறார்கள். அறிவிக்கப்டாத புனிதர்கள் ஏராளம்.
உண்மைதான். கிறிஸ்தவ விசுவாச வாழ்வு என்பது மிகக் கடினமாக ஒன்று. இன்றய பொருள் நாட்டமிக்க (Materialistic) உலகில் கிறிஸ்துவின் மதிப்பிடுகளை அன்றாட வாழ்வில் கடைப்பிடிப்பவர்கள் பெரும் இன்னல்களுக்கும் இடைஞ்சல்களுக்கும் உள்ளாக்கப்படுவது தவிற்கமுடியாத ஒன்று. கிறிஸ்தவ விசுவாச வாழ்வில் பற்றுடனும், உறுதியுடனும் வாழ, இயேசுவின் மதிப்பீடுகளை பின்பற்றி நடக்க ஆண்டவரிடம் அருள்வேண்டி பயணத்தை தொடர்வோம். துன்பங்களின் மத்தியில் வெற்றிவாகை நமதே!
~ பணி மரியதாஸ்