திருமுழுக்கு யோவானின் போதனை
யோவான் நற்செய்தியாளர் தன்னுடைய நற்செய்தியின் தொடக்கத்திலேயே, தன்னுடைய நோக்கத்தைத் தெளிவுபடுத்துகிறார். எதற்காக தான், நற்செய்தியை எழுதுகிறேன் என்பதையும், யாருக்காக நற்செய்தியை எழுதுகிறேன் என்பதையும் இயேசுவின் பணிவாழ்வின் தொடக்கத்திலேயே சொல்லவிடுகிறார்? அதனுடைய அடித்தளம் தான், யூதர்கள் திருமுழுக்கு யோவானிடம் கேள்விகேட்பது. நற்செய்தியில் எழுபது இடங்களில் “யூதர்கள்“ என்கிற வார்த்தை பயன்பட்டிருக்கிறது. அனைத்து இடங்களிலும் அவர்கள் இயேசுவுக்கு எதிராக கேள்வி கேட்பதாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இயேசுவுக்கும், யூதர்களுக்கும் இடையே இருந்த அந்த எதிர்ப்பு முதல் அதிகாரத்திலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆக, நற்செய்தியாளர் கடவுள் தன்னை இயேசுவின் வடிவில் வெளிப்படுத்துகிறார் என்பதையும், ஆனால், யூதர்கள் அதை ஏற்றுக்கொள்ள மறுப்பதையும் நற்செய்தி முழுவதும் சிறப்பாக எடுத்துச்சொல்கிறார்.
இன்றைய நற்செய்தியில், திருமுழுக்கு யோவானிடம் இரண்டு தரப்பினர் அவருடைய நற்செய்தி அறிவிப்புப் பணியை கேள்விகேட்கின்றனர். முதல் தரப்பு, குருக்களும், லேவியர்களும். திருமுழுக்கு யோவான் செக்கரியா என்கிற குருவின் மகன். குருத்துவம் என்பது குடும்ப வழியில் வருவது. அதிகாரவர்க்கத்தினரின் எண்ணப்படி, திருமுழுக்கு யோவான் ஒரு குரு. எனவே, அவருடைய நண்பர்கள், உறவுகள், திருமுழுக்கு யோவான் ஏன் இப்படி வேறுபாடான வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறார்? என்று அவரிடத்தில் கேள்விகேட்க வருவது இயல்பு. அதைத்தான் அவர்கள் செய்கிறார்கள். அதேவேளையில், பரிசேயர்களும், திருமுழுக்கு யோவானை விசாரிக்க வருகிறார்கள். அவர்களின் விசாரணைக்குப்பின், நிச்சயம் தலைமைச்சங்கம் இருப்பதை நாம் உணர முடிகிறது. ஏனென்றால், பாலஸ்தீனத்தில் எந்த ஒருவர் இறைவனின் பெயரால் வார்த்தை அறிவித்தாலும், அவர் உண்மையான இறைவாக்கினரா? அல்லது போலியானவரா? என்பதை விசாரிக்கும் உரிமை தலைமைச்சங்கத்திற்கு இருந்தது. அதனை விசாரிப்பதற்காக, அவர்கள் பரிசேயர்களை அனுப்பி இருந்தார்கள்.
திருமுழுக்கு யோவான் யாரைப்பற்றியும், எதைப்பற்றியும் கவலைப்படாமல் நற்செய்தி அறிவிப்பு ஒன்றையே தன்னுடைய வாழ்வின் நோக்கமாகக் கொண்டிருந்தார். போதனை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், போதிப்பவர் இப்படித்தான் போதிக்க வேண்டும் என்ற மரபை உடைத்தவர் அவர். பொதுவாக, மரபு என்ற பெயரில் நாம் சிறையில் அடைக்கப்படுகிறோம். அது நமக்குள்ளாக இருக்கக்கூடிய புதுமை எண்ணங்களையும், நம்மோடு அடைத்துவிடுகிறது. திருமுழுக்கு யோவானைப்போல, துணிவோடு, நமது நேர்மையான எண்ணத்தை வெளிப்படுத்துவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்