திருமுழுக்கு யோவானின் எடுத்துக்காட்டான வாழ்வு
திருமுழுக்கு யோவானின் பெருந்தன்மை இன்றைய நற்செய்தியிலே வெளிப்படுகிறது. இதுவரை மக்கள் மத்தியில் அவர் பெற்றிருந்த செல்வாக்கு, இறைவாக்கினர் என்று மக்கள் மதித்த பாங்கு, அதிகாரவர்க்கத்தினருக்கு அவர் விடுத்த சவால், இவையனைத்தையும், ஒரு நொடியில் இழப்பதற்கு திருமுழுக்கு யோவான் தயாராகிறார். தன்னை மெசியா என்று மக்கள் நினைத்திருந்தாலும், அந்த நினைப்பை தனது சுயநலத்திற்காக அவர் என்றுமே பயன்படுத்த முயலவில்லை.
தன்னுடைய சீடர்கள் தன்னிலிருந்து, இயேசுவுக்கு நம்பிக்கை வைக்க வேண்டும் என்ற அவரது எண்ணத்தின் வெளிப்பாடுதான், இன்றைய நற்செய்தி. அவர்களின் தேடல் நிறைவிற்கு வரப்போகிறது என்பதை திருமுழுக்கு யோவான வெளிப்படுத்துகிறார். அவர்களின் தேடல் அவரில் அல்ல, மாறாக, இயேசுவில்தான் நிறைவு பெறப்போகிறது என்பதை அவர் தன்னுடைய சீடர்களுக்குக்கற்றுத்தருகிறார். அதற்காக அவர் வருந்தியது இல்லை. தனது புகழ் முடிந்துவிட்டதே என்று, வருத்தப்படவும் இல்லை. இயேசுவை இந்த உலகத்திற்கு முழுமையாக அடையாளம் காட்டுகிறார்.
நமது வாழ்வில் நம்மை அடையாளப்படுத்துவதற்கு அதிக முயற்சி எடுக்கிறோம். எப்படியாவது நம் வாழ்வில் முன்னேற வேண்டும் என்று அதிக அக்கறையும், சிரத்தையும் எடுக்கிறோம். எந்த அளவுக்கு என்றால், அடுத்தவர்களுக்கு குழிவெட்டி, அவர்களை விழச்செய்து, நாம் குளிர் காய நினைக்கிறோம். அதைத்தவிர்த்து, திருமுழுக்கு யோவானின் வாழ்வைப்பின்பற்றுவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்