திருமண வாழ்வில் அதிக மகசூல் எப்படி?
மத்தேயு 19:3-12
இறையேசுவில் இனியவா்களே! இன்றைய திருப்பலிக்கு தித்திப்போடு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
திருமணம் என்பது மனிதர்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்ச்சி ஆகும். திருமணம் என்பது காதலிப்பது போன்று இல்லை. இதில் விட்டுக் கொடுப்பது, நிதானம், ஒத்தச் செயல் செய்வது, விதிமுறைப்படி நடப்பது, குழந்தைகள் வளர்ப்பு போன்றவை அடங்கும். திருமணம் என்பது எதிர்-எதிர் பாலர் சேர்ந்து வாழ்க்கையைத் தொடங்கும் தனி உலகம்.
திருமணம் என்பது ‘ஆயிரம் காலத்துப் பயிர்’ என்று முன்னோர்கள் கூறியதற்கு உகந்த பொருள் உள்ளது. உதாரணமாக நெல், கம்பு, கரும்பு உள்ளிட்ட பயிர்களை எடுத்துக் கொண்டால் அவை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் மகசூல் கொடுத்துவிடும். அதைப்போல திருமண தம்பதியனர் எதிர் வரும் பிரச்சினைகள், சவால்கள் அனைத்தையும் சமாளித்து பயிர்களை போன்று குறிப்பிட்ட காலத்திற்குள் அவர்கள் மகசூல் கொடுப்பர் என்ற அர்த்தம் மிகவும் சிறந்ததே.
இன்றைய நற்செய்தி வாசகம் திருமண வாழ்வில் தம்பதியினர் அதிக மகசூல் தர அருமையான இரண்டு ஆலோசனைகளைக் கொண்டு வருகிறது.
ஆலோசனை 1: மணமுறிவை முறியுங்கள்
இருவரும் ஒரே உடல் அந்த ஒரே உடலில் பிரிவு என்பது இருத்தல் ஆகாது. சிறிய சிறிய பிரச்சினைகள் கண்டிப்பாக உண்டு. ஆனால் அவைகள் வரும், போகும். அதை பெரிதாக்கினால் பாதிப்புகளும் பெரிதாகும். ஆகவே துன்பத்திலும் இன்பத்திலும் பிரியமாட்டோம். எங்கள் வாழ்க்கையால் பிரபலமாவோம் என்ற உறுதி வேண்டும். மணமுறிவு என்பது இல்லாத மகிழ்ச்சியான குடும்பம் அமைக்க வேண்டும். மணமுறிவு கிறிஸ்துவுக்கு எதிரானது.
ஆலோசனை 2: விபசாரத்தை விடுங்கள்
தம்பதியினர் தங்கள் வாழ்க்கைத் துணைக்கு மிகவும் பிரமாணிக்கமாக இருக்க வேண்டும். நம்பிக்கைக்குரியவர்களாக இருக்க வேண்டும். தன் சிந்தனையால், பார்வையால், செயலால் தவறாமல் கண்ணியத்தோடும், கடட்டுப்பாட்டோடும் நடக்க வேண்டும்.
மனதில் கேட்க…
1. நான் என் திருமண வாழ்வில் அதிக மகசூல் கொடுத்துக்கொண்டிருக்கிறேனா?
2. மணமுறிவு, விபச்சாரம் திருமண வாழ்விற்கான எதிரிகள் எனக்கு வேண்டவே வேண்டாமே?
மனதில் பதிக்க…
இருவரும் ஒரே உடலாய் இருப்பர். இனி அவர்கள் இருவர் அல்ல, ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்(மத் 19:5,6)
~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா