திருந்த மறுத்தால் பின்விளைவுகள் அதிகம்
லூக்கா 10:13-16
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
மனிதர்கள் உடலிலும் மனதிலும் ஆரோக்கியமாக வாழ வேண்டும். நம் பாவங்கள் பல நேரங்களில் அந்த ஆரோக்கியமான சூழ்நிலையை வழங்குவதில்லை. அந்த நேரங்களில் எல்லாம் நாம் வலுவற்றவர்களாக இருக்கிறோம். அப்படி வலுவற்றவர்களாய் இருக்கும் நமக்கு இன்றைய நற்செய்தி வாசகம் வலு கொடுப்பதாய் வருகிறது. பாவங்களிலிருந்து திருந்த அழைக்கிறது. திருந்தவில்லை என்றால் பின்விளைவுகள் அதிகம் எனவும் சொல்கிறது. ஆண்டவர் இயேசு திருந்த மறுத்த நகரங்களுக்கான பின்விளைவுகள் என்னென்ன என்பதை விளக்குகிறார். ஏன் உங்களுக்கு நல்லது செய்தேன்? என்று கடவுள் மனவருத்தம்படும் அளவுக்கு பாவம் கொண்டு செல்கிறது. திருந்தாவிடில் பின்விளைவுகள் இரண்டு.
1. சினம்
கடவுள் பல சூழ்நிலைகளை நமக்கு அமைத்து தருகிறார். அப்படி இருந்தும் நாம் மாறவில்லை என்றால் அவர் நம்மீது சினம் கொள்கிறார். அந்த சினம் நாம் அவரின் ஆசீரை பெறுவதற்கு மிகவும் தடையாக உள்ளது.
2. சிறப்பு
பாவத்திலிருந்து திருந்தினால் கடவுளின் சக்தி திரும்ப பொழியப்படுகிறது. நாம் ஆரோக்கியமானவர்களாக மாறுகிறோம். அகமும் முகமும் பிரகாசமாகிறது. மாறாத போது கடவுள் நமக்கு வகுத்து வைத்திருக்கும் சிறப்பு வாழ்க்கையில் தடை ஏற்படுகிறது.
மனதில் கேட்க…
1. என்னுடைய பாவங்களினால் எனக்கு ஏற்பட்ட பின்விளைவுகள் என்னென்ன?
2. பாவத்திலிருந்து திருந்தி அகத்திலும் முகத்திலும் அருளைப் பெறலாம் அல்லவா?
மனதில் பதிக்க…
என் பாவக்கறைகளை எல்லாம துடைத்தருளும் (திபா 51:9)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா