திருத்தொண்டர் லாரன்ஸ் திருவிழா
உங்கள் தொண்டு தொடரட்டும்
யோவான் 12:24-26
தொண்டு செய்வது மிகவும் நல்லது. அதில்தான் மனதிற்கான மகிழ்ச்சியின் மருந்து ஊறுகிறது. தொண்டு செய்வர்கள் பிறரின் நன்மதிப்பை பெறுவதோடு கடவுளின் சிறப்பு ஆசீரைப் பெறுவர். தொண்டு செய்யும் போது நமக்காக ஜெபிக்க பலர் உருவாகிறார்கள். நம்மை பலர் வாழ்த்துகிறார்கள். பாராட்டுகிறார்கள். இந்த ஜெபங்கள், பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துகள் அனைத்தும் நம் வாழ்நாட்களை அதிகரிக்கின்றன.
”என் இருப்பு தொண்டு செய்வதற்காகவே” என்ற விருதுவாக்குடன் வாழ்ந்து சிறப்பான தொண்டுகள் பல செய்து கடவுளின் ஆசீரைப் பெற்று நம் மத்தியிலிருந்து மறைாயமல் இருப்பவர் தான் திருத்தொண்டர் லாரன்ஸ். இன்றைய நாள் வழிபாடு அவரைப் போல மாறி மற்றவரின் மனதில் நீங்கா இடம் பிடிக்க நம்மை அழைக்கின்றது.
திருச்சபையின் சொத்துகள், உடைமைகள் அனைத்தையும் அரசாங்கத்திடம் ஒப்படைக்கவேண்டும் என்று அரசன் வலேயரின் சொன்னதால், திருச்சபையின் உடமைகளுக்குப் பொறுப்பாய் இருந்த திருத்தொண்டர் லாரன்ஸ் வித்தியாசமான ஒரு காரியத்தைச் செய்தார். அது வேறொன்றுமில்லை, திருச்சபையின் உடைமைகள் அனைத்தையும் ஏழைகள், அனாதைகள், கைவிடப்பட்டோர், உடல் ஊனமுற்றோருக்குப் பகிர்ந்து கொடுத்தார். அரசன் திருத்தொண்டர் லாரன்சை அழைத்து, திருச்சபையின் சொத்துக்கள் எங்கே என்று கேட்டபோது, அவர் ஏழைகள், அனாதைகள், வறியவர்கள் போன்றோரை அழைத்து வந்து, இவர்கள்தான் திருச்சபையின் சொத்துக்கள் என்றார். தன் வாழ்வின் கடைசி மூச்சுவரை ஏழைகள், அனாதைகள், வறியவர்கள் இவர்களுக்காகவே தொண்டு செய்தார். இதனால் தன் உயிரையும் கொடுத்தார். மறைசாட்சியாக மடிந்தார்.
நாம் தொண்டு செய்ய பழக வேண்டும். அதுவே மிகச் சிறந்த பழக்கம். இந்த பழக்கததை நாம் மட்டும் செய்வதோடு நம் அருகிலிருக்கின்ற ஒவ்வொருவருக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். அதுவே கிறிஸ்தவத்தின் நோக்கம். ஆகவே நம் ஓய்வில்லா ஆர்வமான தொண்டு தொடரட்டும்.
மனதில் கேட்க…
நான் ஏதாவது தொண்டு செய்திருக்கிறேனா?
தொண்டு செய்வது மிகவும் நல்லது. நான் செய்து பார்க்கலாமா?
மனதில் பதிக்க…
மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார். (மாற் 10:45)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா