திருச்சிலுவை மகிமைப் பெருவிழா
உற்றுப்பாரு… உருமாறு…
யோவான் 3:13-17
இறையேசுவில் இனியவா்களே! திருச்சிலுவை மகிமை பெருவிழா திருப்பிலிக்கு நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
இன்று திருச்சிலுவையின் மகிமைப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். எருசலேமில் கிபி 335ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் நாள் ஆண்டவரின் உயிர்ப்புக்கென்று ஒரு ஆலயம் எழுப்பப்பட்டது. 13ஆம் நாள் உயிர்ப்பை நினைவுகூர்ந்த மக்கள் 14ஆம் தேதி ஆண்டவரின் சிலுவைச்சாவை நினைவுகூர்ந்து சிலுவையை அடையாளமாக வைத்து வழிபட்டனர். 5ஆம் நூற்றாண்டிலிருந்து திருச்சிலுவை விழா செப்டம்பர் 14ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது.
சிலுவை எப்படி திருச்சிலுவையாக மாறியது? சிலுவைச் சாவு என்றால் அது உரோமையர்கள் கொண்டு வந்தது என்பது பலரின் கருத்து. ஆனால் உலகின் பல்வேறு அரசியல் அமைப்பு முறைகளை ஆராய்ந்தால் இந்தியர்கள், கிரேக்கர்கள், எபிரேயர்கள், உரோமையர்கள் என எல்லா ‘கலாச்சாரங்களிலும்’ ஏதோ ஒரு வகையில் மக்கள் மரத்தால் அழிக்கப்பட்டிருக்கின்றனர். செலவில்லாத மரண தண்டனை சிலுவைத் தண்டனை. ஆகையால் தான் உரோமையர்கள் இதைக் கைக்கொள்கின்றனர். எதற்காக அழியப்போகும் கைதிகள் மேல் பணத்தைச் செலவழிக்க வேண்டும். மேலும் சிலுவை மரணத் தண்டனையில் யாரும் அருகில் இருந்து கவனிக்க வேண்டும் என்பதும் இல்லை.
இயேசுவின் காலத்தில் சிலுவைச் சாவு பல்வேறு வகைகளில் நிகழ்த்தப்பட்டது. வழக்கமாக மரண தண்டனை பெறுவோர் கொல்லப்பட்ட சிலுவை மரத்தில் ஏற்றப்பட்டனர். சிலுவையில் ஒருசிலர் அறையப்பட்டதாகவும், மற்றும் சிலர் கட்டப்பட்டதாகவும் ஜோசப் பிலேவுயுஸ் என்ற வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார். அவமானமாக கருதப்பட்ட சிலுவை அன்பர் இயேசுவின் மீது சுமத்தப்பட்டதால் சிறப்பானது. பரிசுத்தரால் பரிசுத்தமாக்கப்பட்டது. திருச்சிலுவை மரமாக மாட்சிப் பெற்றது.
சிலுவையை பார்க்கும் நம் ஒவ்வொருவருடனும் அது பேசுவதற்கு தவறுவதில்லை. நீங்கள் சிலுவையை பார்ப்பது உண்டா? இப்போது பாருங்கள் அது உங்களோடு பேசுகிறது.
1. மனிதா வெறுமையாக்கு உன்னை:
கடவுள் தன்மையை தன் பிறப்பில் இழக்கின்ற இயேசு, தன் மனிதத்தன்மையை சிலுவையில் இழக்கின்றார். முந்தையதை விட அதிக வலி தருவதாக இது இருந்திருக்கும். ‘இது எனக்கு! இன்னும் எனக்கு!’ என்று அனைத்தையும் சேர்த்துக்கொண்டே போகும் நம் நவீன கலாச்சாரத்திற்கு மாற்றுதான் இயேசுவின் வெறுமை. ‘இது உனக்கு! இன்னும் உனக்கு!’ என்று மாற்றுச்சிந்தனையைத் தருவதுதான் சிலுவை. இதை இன்றே செய்ய வேண்டும்.
2. மனிதா துணிச்சலாக்கு உன்னை
என்ன வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம்! என்று துணிந்ததால் தான் இயேசுவால் சிலுவையை அரவணைக்க முடிகின்றது. நம் வாழ்வை நாம் முழுமையாக வாழத் தடையாக இருப்பது நம்மிடம் குறைந்து வரும் துணிச்சல். ‘அதெல்லாம் நமக்கெதுக்குப்பா!’ என்று ஒதுங்கும் மனநிலை வாழ்க்கையை நம்மால் முழுமையால் வாழ முடியாமல் செய்து விடுகிறது. துணிந்தவனுக்கு தூக்கு மேடை ஒரு பொருட்டல்ல என்பதை உணர்ந்தவர்தான் இயேசு. அதை இன்று நாமும் செய்ய வேண்டும்.
3. மனிதா நலமாக்கு உன்னை
நாம் சிலுவை அடையாளம் வரைந்து நம் நலத்தை காக்க வேண்டும். நெற்றி, தலை, வாய், நாக்கு என உடல் உடறுப்புக்களில் சிலுவை அடையாளம் வரைந்து நம்மை நலமாக்க வேண்டும். நாள்தோறும் நாம் இடும் சிலுவை அடையாளம் நம்மை நலமாக்கும்.
ரெட்கிராஸ், ஆஸ்பத்திரி என நாம் திரும்பும் பக்கமெல்லாம் சிலுவை நிற்கின்றது. சிலுவை என்றால் நலம் எனவும், உயிர்ப் பாதுகாப்பு எனவும் அர்த்தப்படுத்தப்படுகின்றது. சிலுவையால் அலங்காரம் செய்வதாலும் திருச்சிலுவைக்குக் கிடைக்காத பெருமை நாம் நலம் காப்பதிலும், உயிர் காப்பதிலும் தான் கிடைக்கிறது. அதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
மனதில் கேட்க…
1. நான் சிலுவையை உற்றுப்பார்த்து அதிலிருந்து பாடம் கற்றது உண்டா?
2. சிலுவை துன்பத்தின் சின்னம் அல்ல துணிச்சலின் சின்னம். நான் துணியலாமா?
மனதில் பதிக்க…
சிலுவை பற்றியச் செய்தி அழிந்து போகிறவர்களுக்கு மடமையே. ஆனால், மீட்புப்பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமை” (1கொரி 1:17)
~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா