திருச்சிலுவைப் பெருவிழா
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இறந்த சிலுவையானது சாதாரண பொருளாக அல்ல. மாறாக, தியாகத்தின் சின்னமாக, நினைவாகக் கருதப்படுகிறது. இயேசுவின் பாடுகள், அவருடைய இறப்பு மற்றும் உயிர்ப்பு தான் கிறிஸ்தவத்தின் விசுவாசத்தை உலகிற்கு கொண்டு வந்தது. எனவே தான் தூய பவுலடியார் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் (1: 17, 18) ”திருமுழுக்கு கொடுப்பதற்கு அல்ல, நற்செய்தியை அறிவிக்கவே கிறிஸ்து என்னை அனுப்பினார். மனித ஞானத்தின் அடிப்படையிலான சொற்களில் இந்நற்செய்தியை அறிவித்தலாகாது. அவ்வாறு அறிவித்தால் கிறிஸ்துவின் சிலுவை பொருளற்றுப்போய்விடும். சிலுவை பற்றியச் செய்தி அழிந்து போகிறவர்களுக்கு மடமையே. ஆனால், மீட்புப்பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமை” என்று கூறுகிறார்.
நான்காம் நூற்றாண்டின் முதல் பகுதியில் திருச்சிலுவையின் பக்தி முயற்சியை நாம் காண முடிகிறது. அலெக்சாண்டிரியன் குறிப்பேடு வழங்கும் சான்றுப்படி கான்ஸ்டன்டைன் தாயான ஹெலன் (இலேனம்மாள்) அரசி தான், ஆண்டவரின் திருச்சிலுவையை செப்டம்பர் 14, 320 அன்று கண்டுபிடித்தார். அதன்பின் 13 செப்டம்பா் 335 அன்று, திருச்சிலுவையின் ஆலயமும், எருசலேமில் உள்ள கொல்கத்தா என்னும் இடத்தில் அர்ச்சிக்கப்பட்டது. அதற்கு அடுத்தநாள் ஹெலனால் கண்டுபிடிக்கப்பட்ட திருச்சிலுவை வணக்கம் செய்யப்படும் பக்தி முயற்சிக்காக வைக்கப்பட்டது. அன்றிலிருந்து அது ஒரு விழாவாக மாறியது. கூட்டத்தின் காரணமாக திருச்சிலுவை உயர்த்தி நிறுத்தப்பட தொடங்கியது. அதிலிருந்து அவ்விழாவிற்கு திருச்சிலுவை உயர்த்தப்பட்ட விழா என்ற பெயர் வரத்தொடங்கியது. உண்மையிலேயே திருச்சிலுவை உயர்த்தப்பட்டது என்பது சிலுவையினால் பாவத்தின் மீதும் சாத்தானின் மீதும் கிறிஸ்து கொண்ட வெற்றியினைக் குறிப்பதாகும். இவ்விழாவின் மையக்கருத்துயாதெனில் திருச்சிலுவையில் இயேசுவின் இறப்பினால் அவர் நமக்காக மீட்பைப் பெற்றுத்தந்தார் என்பதேயாகும்.
சிலுவை என்பது நமக்கு மீட்பைப் பெற்றுத்தரும் கருவி. வாழ்வில் நமக்கு துன்பங்களான சிலுவைகள் வருகிறபோது, துவண்டுவிடாமல், நம்பிக்கையோடு, அது நமக்கு மீட்பைப்பெற்றுத்தர வல்லது என்கிற உணர்வோடு மகிமைப்படுத்துவோம்.
திருச்சிலுவையின் மகிமை
இன்றைக்கு பல வீடுகளில் பாடுபட்ட சுரூபங்களை வைப்பதற்கும், வெறும் சிலுவைகளை வைப்பதற்கும் தயங்குவார்கள். காரணம், ஒருவேளை நமக்கு துன்பங்கள் வந்துவிடுமோ? என்கிற எண்ணம் தான். சிலுவை இன்றைக்கு, துன்பங்களின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. முக்கியமான திருவிழா நாட்களில், இயேசுவின் பாடுபட்ட சிலுவையை நாம் ஆராதித்தால் கூட, மக்கள் மனதிலிருந்து, இத்தகைய எண்ணங்கள் மாற்றம் பெறுவதாக இல்லை. ஆக, இந்த திருவிழா, சிலுவையின் மேன்மையை, மகத்துவத்தை நமக்கு பறைசாற்றுவதாக இருக்கிறது.
சிலுவை நமக்கு மூவொரு இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துவதாக அமைகிறது. எனவே தான், நாம் ஒவ்வொருநாளும் ஆலயத்தின் வழிபாடுகளில் பங்கெடுக்கிறபோது, சிலுவை அடையாளம் வரைகிறோம். இந்த மூவொரு இறைவனின் பிரசன்னம் நமது வாழ்வோடு இணைந்திருப்பதை சிலுவையான நமக்குக் காட்டுகிறது. சிலுவையைச் சுமந்ததும், சிலுவையில் உயிர்விட்டதும் இயேசுவாக இருக்கலாம். ஆனால், அந்த இயேசுவின் மீட்புப்பயணத்தில் தந்தையாகிய இறைவனின் கரமும், தூய ஆவியின் வழிநடத்துதலும் நிறைவாக இருக்கிறது. இயேசுவின் இந்த சிலுவைப்பயணத்திற்கு அடித்தளமிட்டவர் தந்தையாகிய இறைவன். இந்த சிலுவைப்பயணத்தில், இயேசுவை உடனிருந்து வழிநடத்தியவர் தூய ஆவியானவர். சிலுவை மரணத்தை அனுபவித்து, அதனை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டவர் நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்து. ஆக, இந்த மூவொரு இறைவன் நம்மீது வைத்திருக்கிற அன்பு, இரக்கம் முதலான பண்புகளுக்கு, சிலுவை சான்றாக அமைகிறது.
சிலுவையைக் கண்டு பயந்து ஓடாமல், அது மூவொரு இறைவனின் பிரசன்னம் என்பதை உணர்ந்து வாழ, இந்த விழா நமக்கு அழைப்புவிடுக்கிறது. சிலுவை தான் நமக்கு மீட்பைப் பெறுவதற்கு உதவியாக இருந்திருக்கிறது. சிலுவைதான் நமக்கு கடவுளின் அருளை முழுமையாகப் பெற்று, பாவத்திலிருந்து விடுதலை பெறுவதற்கு முதன்மையான காரணமாக இருந்திருக்கிறது. சிலுவையின் மகிமையை உணரக்கூடியவர்களாக இருப்போம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்