திராட்சைக்கொடி மீது பரிவு காட்டும்
திருப்பாடல் 80: 1, 2, 14 – 15, 17 – 18
“கடவுளே! மீண்டும் வாரும். விண்ணினின்று கண்ணோக்கியருளும். இந்த திராட்சைக்கொடி மீது பரிவு காட்டும்“ என்கிற வரிகள், கடவுளின் வல்லமை, அதிகாலையில் விழித்தெழும் சூரியனின் செங்கதிர்கள் இந்த பூமியின் மீது படர்வது போல, இஸ்ரயேல் மக்கள் மீது படர வேண்டும் என்கிற அர்த்தத்தில் சொல்லப்படுகிறது. இஸ்ரயேலை பழைய ஏற்பாட்டில் திராட்சைக்கொடிக்கு ஒப்பிட்டுச் சொல்வர். பரிவு என்பது உணர்வுப்பூர்வமான ஒன்று. மற்றவரின் தயவை எதிர்பார்த்து நிற்கிற செயல். அதுதான் இங்கு வெளிப்படுகிறது.
இஸ்ரயேல் மக்கள் சூரியனாக இருக்கின்ற இறைவனின் பராமரிப்பில் வாழ்ந்தவர்கள். அவரது படைப்பில் உருவானவர்கள். அவரால் வளர்த்தெடுக்கப்பட்டவர்கள். எல்லாருக்கு வருகிற சோதனை இஸ்ரயேல் மக்களுக்கும் வருகிறது. தங்களது உயர்வுக்கு கடவுள் காரணம் அல்ல, தங்களது உடல் ஆற்றலே என்கிற முடிவுக்கு வருகின்றனர். செருக்கு அவர்களது உள்ளத்தில் புகுகிறது. அந்த செருக்கு கடவுளை விட்டு விலகச்செய்கிறது. வேற்றினத்தாரோடு, வேற்றினத்து தெய்வங்களோடு நட்புறவு பாராட்டச் செய்கிறது. ஆனால், எவ்வளவு வேகமாக கடவுளை விட்டு விலகிச்சென்றார்களோ, அவ்வளவு வேகமாக பாடம் கற்றுக்கொண்டார்கள். கடவுள் தான், தங்களுக்கு எல்லாமுமாக இருந்திருக்கிறார் என்கிற பாடத்தை, உணர்ந்து கொண்டார்கள். கடவுளிடம் திரும்பினால் தங்களை ஏற்றுக்கொள்வார் என்கிற நம்பிக்கையில் இந்த பாடல் பாடப்படுகிறது.
நாம் உயர்ந்த நிலைக்கு போகிறபோது, செருக்கு நமக்குள்ளாக வருவதற்கான வாய்ப்பு அதிகமாகக் காணப்படுகிறது. இறைவனை நாம் முழுமையாகப் பற்றிப்பிடித்துக் கொண்டோம் என்றால், நிச்சயம் நமக்கு அழிவு என்பதே இல்லை. எப்போதும், இறைவன் முன்னிலையி் தாழ்ச்சி நிறைந்தவர்களாக வாழ்வோம்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்