தியாகமும் வாழ்வும்
எங்கே தியாகம் இருக்கிறதோ, அங்கே வாழ்வு இருக்கிறது. இந்த உலகம் இருப்பதும், இயங்குவதும், வரலாற்றிலே, வாழ்ந்த தன்னலமற்ற தியாக உள்ளங்களினால் தான். எனை ஈன்ற தந்தைக்கும், எனை வளர்த்த தாய்நாட்டிற்கும், என்னால் சிறிதளவு நன்மை கிடைக்குமானால், செத்தொழியும் நாளும் எனக்கு திருநாளே. இதுதான், தமிழர்களாகிய நம்முடைய முன்னோர்களின் வாழ்வு முறை. இன்று நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது? அடுத்தவனுக்கு குழிவெட்டி, எப்படியாவது நான் வாழ்க்கையில் முன்னேறிவிடலாம் என்கிற பார்வைதான் அதிகம். அப்படிப்பட்ட பார்வையை மறந்து, தியாக உள்ளங்களாக மாற இன்றைய வாசகம் நமக்கு அழைப்பு விடுக்கிறது.
இயேசு கிறிஸ்து, தான் கடவுளின் மகன் என்கிற உயர்ந்த நிலையை நமக்காக தியாகம் செய்தார். நாம் வாழ்வு பெற வேண்டும் என்பதற்காக, தன்னையே வெறுமையாக்கி, அடிமையின் தன்மை பூண்டு, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச்சாவையே ஏற்கும் அளவுக்கு, தன்னை தியாகம் செய்தார். நமக்காக தன் உடலையே உணவாகத்தந்தார். எனவே, நாம் வாழ்வு பெற்றுள்ளோம். எவ்வாறு ஒரு மனிதனுடைய கீழ்ப்படியாமையால் இந்த உலகத்திற்கு சாவு வந்தததோ, அதேபோல ஒரு மனிதருடைய தியாகத்தினால் நாம் அனைவருமே, வாழ்வு பெற்றுள்ளோம். இயேசுவினுடைய தியாகம் கல்வாரி மலையோடு நின்று விடவில்லை. தொடர்ந்து ஒவ்வொரு நாளும், திருப்பலியிலே, நமக்காக தன்னை தியாகம் செய்கிறார். இந்த அப்ப, இரச வடிவிலே நமக்கு வாழ்வு கொடுத்துக்கொண்டிருக்கிறார். எனவே தான் இயேசு கூறுகிறார்: “வாழ்வு தரும் உணவு நானே: இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வர்”.
எங்கே தியாகம் இருக்கிறதோ, அங்கே வாழ்வு இருக்கிறது. இயேசுவினுடைய ஒவ்வொரு சீடரும், உலகமெங்கும், கடினமான , உயிருக்கு ஆபத்தான கப்பல் பயணத்தை மேற்கொண்டு, தங்கள் வாழ்க்கையையே தியாகம் செய்தார்கள். அதனால், உண்மை கடவுளை அறிந்தவர்களாக நாம் அனைவருமே வாழ்வு பெற்றுள்ளோம். உலகம் முழுமைக்கும் நற்செய்தியை கொண்டு சென்றவர் புனித சின்னப்பர். எத்தனை கப்பல் பயணங்கள், எத்தனை ஆபத்துகள். இருந்தாலும், அவற்றையெல்லாம், புறந்தள்ளிவிட்டு, தன்னுடைய வாழ்க்கையை தியாகம் செய்தார். எத்தனையோ மக்கள் வாழ்வு பெற்றிருக்கிறார்கள்.
கிறிஸ்தவர்களாக வாழ அழைக்கப்பெற்றிருக்கிற நாம் ஒவ்வொருவரும், தியாக வாழ்வை வாழ நினைவூட்டப்படுகிறோம். நம்முடைய தியாகம், நிச்சயம் மற்றவருக்கு வாழ்வு கொடுக்கும், என்றால், அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என்பதைத்தான் இந்த திருவிழா நமக்கு அழைப்பு விடுக்கிறது. சாதாரண உணவு உடலில், பல்வேறு வேதிவினை மாற்றங்களை நிகழ்த்தும்போது, இயேசுவின் உடலையும், இரத்தத்தையும் உட்கொள்ளும், நம் வாழ்வில் ஆழமான, இன்னும் அதிகமான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். இயேசுவின் செயல்பாடுகள் நம் செயல்பாடுகளாக மாற வேண்டும்.
– அருட்பணி. தாமஸ் ரோஜர்