தாழ்த்தினால் உணர்வாய்
யோவான் 8: 21-30
கடவுளுக்கும் மோசேவுக்குமான உரையாடலில் மோசேவின் கேள்விக்கு கடவுளின் பதில் கிடைக்கிறது. காண்க வி.ப 3:13-14, “கடவுள் மோசேயை நோக்கி, இருக்கின்றவராக இருக்கின்றவர் நாமே” என்றார். இன்றைய நற்செய்தியில் அவர்களின் கேள்விக்கு இயேசு ‘இருக்கிறவர் நாமே’ என்ற பதிலினைக் கொடுக்கின்றார்.
கடவுளின் வார்த்தையை மோசே முழுவதுமாக புரிந்து கொண்டாரா? என்பது தெரியவில்லை, ஆனால் அவரின் வார்த்தை அடிமைத்தனத்திலிருந்து மக்களை மீட்டெடுக்க உந்தி தள்ளியது. அவரும் தன்னிடம் பேசிய அக்குரலினை நம்பி ஏற்றுக் கொண்டார். ஆனால் இன்றைய நற்செய்தியில் ஆண்டவரின் குரலினை மட்டும் அவர்கள் கேட்கவில்லை, மாறாக, அவரையும் அவரின் ஒவ்வொரு வல்ல செயல்களையும் தன் கண்களால் பார்த்தும் உணர்ந்தும் கொண்டவர்கள,; அவரை நம்ப தயங்கி, ‘இருக்கின்றவராக இருக்கிறவர் நானே’ என்பதினை இன்னும் எளிதாக்கி ‘நானே’ என்று ஏழுமுறை எடுத்துக்காட்டோடு பேசியவரின் (நேற்றைய சிந்தனையைப் பார்க்கவும்) வார்த்தைகள் இவர்களின் அதிமேதாவித்தனத்துக்கு புரியவில்லை. புரிந்தாலும் தன்னோடு பார்த்து பழகியவர்கள் என்பதால் அவர்களின் முற்சார்பு எண்ணங்கள் முட்டுக்கட்டை போடுகின்றது.
நாமும் எளிய மனத்தோடு அவரின் குரலுக்கும் வார்த்தைக்கும் செவிமடுப்போம். நாம் படித்த அறிவியலையும் அறவியலையும் அவரினை அறிவதற்காக பயன்படுத்துவோம். அவரை நாம் கண்டடைய எளிய வழி நம் ஆணவத்தையும், அகங்காரத்தையும் வேரறுத்து தாழ்த்துவோம் அவரே தந்தை, தந்தையே அவர் என்பதை உய்த்து உணர்வோம். நம்மையே அவர்முன் தாழ்த்துவோம்.
– திருத்தொண்டர் வளன் அரசு