தாழ்ச்சியோடு வேண்டுதல் செய்வோம்
இரண்டு மனிதர்கள் ஆலயத்திற்கு செபிக்கச் செல்கிறார்கள். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர். ஆனால், இரண்டு பேரும் செபித்தார்களா? உண்மையில் யாருடைய செபம், கடவுளால் கேட்கப்பட்டது? யார் உண்மையில் செபித்தார்கள்? என்பதை, நாம் பார்ப்போம். முதலில் பரிசேயர். அவருடைய வார்த்தைகள் நிச்சயமாக செபம் அல்ல, மாறாக, அது தற்புகழ்ச்சி. தன்னைப்பற்றி கடவுளிடத்தில் பேசுவதைக்காட்டிலும், தன்னைப்புகழ்வதில் அதிக சிரத்தை எடுக்கிறார். கடவுளிடத்தில் பேசுவதைக்காட்டிலும், தன்னைப்பற்றி சொல்வதில், அவர் ஆர்வம் காட்டுகிறார். இது உண்மையான செபம் அல்ல. தற்புகழ்ச்சியும், செருக்கும் என்றைக்குமே நமக்கு அழிவைத்தான் தரும். கர்வம் கொண்டவர்கள் நிச்சயம் செபிக்க முடியாது.
வரிதண்டுபவர் தொலைவில் நிற்கிறார். கடவுளிடத்தில் நெருங்கிவர தனது பாவங்கள் தடையாக இருப்பதாக எண்ணுகிறார். அவரிடத்தில் குற்ற உணர்ச்சி காணப்படுகிறது. தன்னை மிகப்பெரிய பாவியாக எண்ணுகிறார். இது தற்புகழ்ச்சிக்கு இடங்கொடாமல், தன்னை ஒறுத்து, கடவுள் முன்னிலையில் தாழ்ச்சியோடு நிற்பதற்கு ஒப்பாக இருக்கிறது. செபம் என்பது நமது நிலையை உணர்வது. கடவுள் முன்னிலையில் நம்மையே தாழ்த்திக்கொள்வது. செபம் என்பது கடவுளின் இரக்கத்தை பெற்றுக்கொள்வதற்காக மன்றாடுவது. இரக்கமே தேவை இல்லை, என்கிற மனநிலையில் உள்ள ஒருவர், நிச்சயம் செபிக்க முடியாது.
தற்புகழ்ச்சியும், மற்றவர்களோடு நம்மை ஒப்பிடுவதும் நாம் கடவுளோடு பேசுவதற்கு தடையாக இருப்பவை. செபிக்கின்ற மனநிலையை கெடுக்கக்கூடியவை. எனவே, கடவுள் முன்னிலையில் செபிக்கக்கூடிய மனநிலையைப் பெறுவதற்கு, தாழ்ச்சியை நாம் கேட்போம். தாழ்ச்சி மனநிலையோடு செபிப்போம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்