தாயன்பு
ஒரு தாய் தன் குழந்தையின் மீது ஒவ்வொரு மணித்துளியும் நினைவு வைத்திருப்பாள். அந்த குழந்தையின் தேவையை, அவளாகவே அறிந்து, அதனை நிறைவேற்றுகிறவள் தான் தாய். எந்த ஒரு தாயும் தன் குழந்தை வேதனைப்படுவதையோ, துன்பப்படுவதையோ விரும்பமாட்டாள். இந்த தாயன்பு தான், கடவுளின் அன்பாகச் சொல்லப்படுகிறது. இந்த தாயன்பை விட பல மடங்கு மேலானது கடவுளின் அன்பு. தாயன்பையே நாம் வியந்து பார்க்கிறோம். அப்படியென்றால், கடவுளின் அன்பு எந்த அளவிற்கு மகத்துவமானது என்பதை, இங்கே நாம் அறிந்து கொள்ளலாம்.
சுமைகளால் சோர்ந்திருப்பவர்களை இயேசு அழைக்கிறார். வழக்கமாக, நண்பர்களின் மகிழ்ச்சியில் நாம் அதிகமாகப் பங்கெடுப்போம். அவர்களோடு மகிழ்ந்திருப்போம். ஆனால், அவர்களின் துயரத்தில் பங்கெடுக்க வேண்டுமென்றால், ”என்னுடைய நிலையே எந்த அளவுக்கு மோசமானதாக இருக்கிறது” என்று, அதிலிருந்து ஒதுங்கிவிடுவோம். துன்பத்திலும், துயரத்திலும் பங்கெடுக்கிறவர்கள் வெகு குறைவுதான். ஆனால், இங்கே இயேசுவே முன்வருகிறார். அவராகவே முன்வந்து, நமது துன்பத்தில் பங்கெடுக்கிறார். நம்மை மீட்பதற்கு துணையாக இருக்கிறார்.
கடவுளின் தாயன்பை வியந்து பார்க்கிற நாம், நமது பெற்றோர்களை வயதான பருவத்தில் எப்படி பார்க்கிறோம்? எந்த அளவுக்கு நம்மை கண்ணின் இமைபோல், உண்ணாமல், உறங்காமல், நம்மை தாலாட்டி, சீராட்டி வளர்த்திருப்பார்கள். அவர்களை நாம் போற்றுகிறோமா? அவர்களை வயதான பருவத்தில் பேணிவளர்க்கிறோமா? சிந்திப்போம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்