தாகமாய் இருப்பவர்களே,நீங்கள் அனைவரும் நீர்நிலைகளுக்கு வாருங்கள்.ஏசாயா 55:1
பிரியமானவர்களே!! இதோ நம்முடைய ஆண்டவர் நம் ஒவ்வொருவரையும் இவ்வாறே அழைக்கின்றார்.தாகமாய் இருப்பவர்களே,நீங்கள் அனைவரும் நீர்நிலைகளுக்கு வாருங்கள்.கையில் பணமில்லாதவர்களே,நீங்களும் வாருங்கள்.தானியத்தை வாங்கி உண்ணுங்கள்,வாருங்கள்,காசு பணமின்றித் திராட்சை ரசமும் பாலும் வாங்குங்கள்.உணவாக இல்லாத ஒன்றிற்காக நீங்கள் ஏன் பணத்தை செலவிடுகின்றீர்கள்?நிறைவு தராத ஒன்றிற்காக ஏன் உங்கள் உழைப்பை வீனாக்குகிரீர்கள்?உங்கள் ஆண்டவருக்கு செவிகொடுங்கள்.நல்லுணவை உண்ணுங்கள்;கொழுத்ததை உண்டு மகிழுங்கள்.ஏசாயா 55 : 1, 2 ,
நம்முடைய ஆண்டவர் எத்துனை கருணை மிக்கவர் என்பதை நாம் சமயத்தில் மறந்து புலம்பி தவிக்கிறோம்.நாம் மறந்தாலும் அவர் நம்மை ஒருபோதும் மறக்கவே மாட்டார்.ஏனெனில் நம்முடைய எண்ணங்கள் வேறே,அவருடைய எண்ணங்கள் வேறே,நம்முடைய வழிமுறைகள் வேறே,அவருடைய வழிமுறைகள் வேறே.மண்ணுலகிலிருந்து விண்ணுலகம் மிகவும் உயர்ந்து இருப்பது போல நம்முடைய சிறிய எண்ணங்களைவிட ஆண்டவரின் எண்ணங்கள் மிகவும் உயர்ந்து இருக்கின்றன.
எனக்கு ஒரு கதை ஞாபகம் வருகிறது.ஒரு மனிதர் வெளியூர் செல்ல நினைத்து அங்குள்ள உறவினர்களுக்கு தன்னுடைய தோட்டத்தில் விளைந்த நல்ல காய்கறிகளையும், பழங்களையும் எடுத்துக்கொண்டு அவற்றை ஒரு மூட்டையில் கட்டி தூக்கிக் கொண்டு பஸ்ஸில் பிரயாணம் செய்தார்.அவர் பஸ்ஸில் ஏறிய பிற்பாடும் அந்த மூட்டையை கீழே வைக்காமல் தன் தலையில் வைத்துக்கொண்டு உட்கார்ந்தார்.உடனே நடத்துனர் ஐயா,ஏன் இன்னும் மூட்டையை தலையில் வைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்/.அதை கீழே வையுங்கள் என்று சொல்லியும் அந்த மனிதர் கேட்காமல் அந்த மூட்டையை தலையிலேயே வைத்துக்கொண்டு இருந்தார்.இதைப்போல் தான் நாமும் நம்முடைய கவலைகளை கடவுளிடம் சொல்லிவிட்டு பிறகு மறுபடியும் புலம்பிக்கொண்டே இருப்போம்.அந்த கவலையை இறக்கி வைக்கமாட்டோம்.
ஆண்டவரின் பேரிரக்கம் பெரியது.அவர் நமக்கு யாவற்றையும் தர ஆவலோடு காத்திருக்கும் பொழுது நாம் எதற்காக தவிக்கவேண்டும்?நாம் இறைப்பற்று உள்ளவர்களாய் நடந்துக்கொண்டால் ஆண்டவரின் கொடிகள் நிலைத்து நிற்கும்.அவரது பரிவு என்றும் வெற்றியைக் கொடுக்கும்.பெருஞ்சுமை சுமந்து சோர்ந்து இருப்போரே எல்லோரும் ஆண்டவரிடம் செல்வோம் அவர் நமக்கு இளைப்பாறுதல் தருவார்.ஆண்டவரை நம்புவோம்.யாவற்றையும் பெற்றுக்கொள்வோம்.
எங்களை நேசிக்கும் அன்பின் தகப்பனே!!
உம்மை போற்றுகிறோம்,துதிக்கிறோம்,ஆராதிக்கிறோம்.இதோ உமக்கு செவிகொடுக்கும் யாவருக்கும் நீர் நல்லுணவையும் தாகத்தை தீர்க்க தண்ணீரையும் கொடுக்கிறீர்.உமது உடலை நல்லுணவாக புசிக்கக் கொடுத்தீர்.உமது இரத்தத்தை எங்கள் தாகம் தீர்க்கும் தண்ணீராக கொடுத்தீர்.இயேசப்பா இதைவிட எங்களுக்கு வேறே என்ன வேண்டும்.?உம்மையே கொடுத்தீரே!அதற்கு எப்பொழுதும் நன்றி உள்ளவர்களாக இருக்க போதித்து வழிநடத்தும்.துதி,கனம்,மகிமை யாவும் உம் ஒருவருக்கே செலுத்துகிறோம் எங்கள் நல்ல பிதாவே!!
ஆமென்! அல்லேலூயா!!