தவக்காலம் – திருநீற்று புதன்
மத்தேயு 6:1-6, 16-18
தன்னிலன்பு, பிறரன்பு, இறையன்பு
தவக்காலத்தைத் துவங்கும் இந்தப் புனிதமான நாளிலே, நம்மை நாமே சீர்தூக்கிப் பார்க்கத் திரு அவை அழைக்கின்றது. இந்த அருளின் காலத்தைக் கடவுளின் கொடையாகவும், அவரின் பேரிரக்கத்தின் பரிசாகவும் ஏற்றுக் கொள்வோம். கிறித்துவின் பாடுகளை நம் கண்முன் வைத்து, நம் பாவங்களுக்கு மன்னிப்பையும், பரிகாரத்தையும் செய்ய முயற்சிப்போம். அதற்கு நம்மைத் தகுதியாக்கிக் கொள்ள நாம் மூன்று பண்புகளை மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.
1. ஈதல் : தருமம் சாவினின்று நம்மைக் காப்பாற்றும், எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மையாக்கும். தருமம் செய்வோரின் வாழ்வை நிறைவுள்ளதாக்கும். (தோபி – 12:9) ஈதல் நாம் பிறரன்பில் வாழ்ந்திட நம்மை அழைக்கின்றது. ஈயென்று கேட்பவனுக்குக் கொடுப்பது மட்டுமன்று நாமே வலியச் சென்று வறியவரைத் தேடிக் கொடுப்பதினால் மட்டுமே இது முழுமை பெறும்.
2. செபித்தல் : இன்று முதல் நாற்பது நாள் நாம் செபத்திலும் வழிபாட்டிலும் ஈடுபட்டு இருப்பது இயேசு அதிக நேரம் செபித்தார் என்பதால் மட்டும் அல்ல. மாறாக, அவர் தன் செபத்தினால் மட்டுமே பல குழப்பங்களுக்கு தீர்வையும், பல தடைகளுக்கு விடைகளையும் கண்டுபிடித்தார். இறுதியாகக் கடைசி மூச்சு வரை இறைத்திருவுளத்தை நிறைவேற்ற அவரே தடுமாறிய நிலையிலும், கெத்சமனித் தோட்டத்தில் அவர் செய்த செபம்தான் அவரை உறுதிப்படுத்தியது. இவ்வாறு செபம் இறையன்பில் வேரூன்ற நம்மை அழைக்கிறது.
3. நோன்பிருத்தல் : இது அனைத்து மதங்களிலும் காணப்படுகிறது. எல்லா மதங்களும் நம் ஆன்மாக்களைப் பரமாத்மாவோடு இணைத்;திருக்கவே வழிகாட்டுகிறது. ஆனால் எந்த மதத்திலும் ஒரு ‘மாதிரி’யானது கொடுக்கப்படவில்லை. ஆனால் நமக்கோ நமது கிறித்துவே முன் மாதிரியாக நோன்பிருந்து நம்மை வழிநடத்துகின்றார். உடலையும், உணவையும், உள்ளத்தையும் கட்டுப்படுத்த இந்த நோன்பு நமக்கு உதவுகின்றது. இது ஒருவர் தன்னைத்தானே அன்பு செய்வதற்கும் உதவுகின்றது.
இவையனைத்தையும், பிறர் காணச் செய்யாமல் தன்னை நேசிப்பது போல பிறரை நேசிக்கவும், எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளை நேசிக்கவும், இத்தவக்காலத்தினை நமதாக்குவோம்.
– திருத்தொண்டர் வளன் அரசு