தற்பெருமை வேண்டாம்
இயேசு, ”வானத்திலிருந்து சாத்தான் மின்னலைப்போல விழக்கண்டேன்” என்கிறார். இதனுடைய பொருள் என்ன? இதனை எப்படிப்புரிந்து கொள்வது? இயேசு எதற்காக இதைச்சொல்கிறார்? இயேசு தனது பணியின் பயிற்சியாக, எழுபத்திரண்டு சீடர்களை அனுப்புகிறார். அவர்கள் தங்களது பணியை முடித்தபின் இயேசுவிடம் மகிழ்ச்சியோடு தங்கள் அனுபவத்தைப்பகிர்ந்து கொள்கிறார்கள். ”ஆண்டவரே, உமது பெயரைச் சொன்னால் பேய்கள்கூட எங்களுக்கு அடிபணிகின்றன” என்று பெருமை பொங்கச்சொல்கிறார்கள். இதனுடைய பிண்ணனியில்தான் இயேசு மேற்கண்ட வார்த்தைகளைச்சொல்கிறார்.
இதற்கு இரண்டுவிதத்திலே பொருள் கொடுக்கலாம்.
1. இயேசு கொண்டு வர விரும்பிய இறையாட்சிக்கான அறிகுறிகள் தான் சாத்தான் தோற்கடிக்கப்படுவது. ஏனென்றால், இருளின் ஆட்சி முடிந்து, சாத்தான் தோற்கடிக்கப்பட்டு, கடவுளின் அரசு மலரத்தொடங்கிவிட்டதற்கான அருங்குறிகள் தான் சீடர்களின் வெற்றி.
2. இயேசு சீடர்களின் தற்பெருமைக்கு எதிராக கொடுக்கின்ற எச்சரிக்கையாகவும் இதை எடுக்கலாம். ஏனென்றால், சாத்தான்கள் தற்பெருமையினால் கடவுளுக்கெதிராக கிளர்ந்தெழுந்த வானதூதர்கள். அவர்கள் தற்பெருமையினால் கீழே விழுந்தார்கள். சீடர்களும் பெற்றிருக்கிற சிறிய வெற்றியை வைத்து தற்பெருமை அடைந்துவிடக்கூடாது, என்று இயேசு எச்சரிக்கிறார்.
தற்பெருமை நம்மை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும். சீடர்களிடம் பேய்களை ஓட்டக்கூடிய வல்லமை இருந்தது உண்மை. அவர்களின் தன்னம்பிக்கை அதிகமானதும் உண்மை. ஆனாலும், அத்தகைய நம்பிக்கை அவர்களுடைய தோல்விக்குக்காரணமாகிவிடக்கூடாது என இயேசு எச்சரிக்கிறார். தற்பெருமையை நம்மிடமிருந்து அகற்றுவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்