தற்பெருமை அல்ல அடுத்தவர் பெருமையே!
லூக்கா 14:1,7-11
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
தான் என்ற அகங்காரம் மனிதர்களுக்கு வருவதால், அவர்கள் சிறுமை யடைகிறார்கள் மேலும் அருகிலிப்பவர்களாலே அவர்கள் நிராகரிக்கப்படுகிறார்கள். இந்தத் தற்பெருமை மனிதனை இறைநிராகரிப்பில் தள்ளி விடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆகவே இன்றைய நற்செய்தி வாசகம் தற்பெருமை வேண்டாம். மாறாக தாழ்ச்சியே வேண்டும் என்ற தலையாய பாடத்தோடு வருகிறது. தற்பெருமை வந்தால் பல தீமைகள் விரைவாக வந்து நமக்குள் குடிகொள்கின்றன. அவற்றுள் இரண்டு.
1. நடிப்பு
மனிதர்கள் தங்களுடைய ஒவ்வொரு செயலையும் செய்யும் போது அதில் தூய்மையான எண்ணம் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் தான் அவர்கள் செய்யக் கூடிய கடுகளவு நன்மையானாலும் அது இறைவனிடத்தில் ஏற்றுக் கொள்ளப்படும். ஆனால் தற்பெருமை கொள்பவர் மிகவும் நல்முறையில் நாடகம் நடிக்கத் தெரிந்தவர்கள். ஆகவே அவா்கள் உள்ளத்தில் தூய்மை இருக்காது. நடிப்பே வாழ்வாகிறது. இந்த நடிப்பு பிறருக்கு தெரியும் போது அதில் மனவிரக்தி ஏற்படும்.
2. மதிப்பு
*தற்பெருமை மனிதனிடம் குடி கொண்டால் அடுத்த மனிதனை அவன் மதிக்க மாட்டான். நாம் வாழ்வில் அடுத்தவர்களை மதித்து வாழ்வது மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சமாகும். நம்மை விட அறிவால் செல்வத்தால், அந்தஸ்தால் கீழ்நிலையில் உள்ளவர்களிடம் கூட நமது அகங்காரத்தை, ஆணவத்தை வெளிப்படுத்தி விடக் கூடாது. தற்பெருமை நமக்குள் வரும்போது பிறரை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் மிகவே குறைகிறது. நம்மை பிறர் மதிக்க வேண்டும் என்ற தவறான எண்ணம் தழைத்தோங்குகிறது. இது முற்றிலும் தவறானது.
மனதில் கேட்க…
1. அழிவைத் தரும் தற்பெருமை எனக்கு வேண்டுமா?
2. தற்பெருமை அல்ல அடுத்தவர் பெருமையே நாடுவது நல்லது அல்லவா?
மனதில் பதிக்க…
ஆண்டவர்முன் உங்களைத் தாழ்த்துங்கள்; அவர் உங்களை உயர்த்துவார் (யாக் 4 :10)
~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா