தயங்காதே! தளராதே!
மாற்கு 10:46-52
இறையேசுவில் இனியவா்களே! பொதுக்காலம் 30ம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாட வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
அன்புமிக்கவர்களே! இளம் தொழிலதிபர் ஒருவரின் வெற்றி கதையை உங்களுக்குச் சொல்கிறேன். சீனநாட்டைச் சார்ந்தவர் அவர். தோல்விகளையும் புறக்கணிப்புகளையும் சந்தித்து சீனாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆனவர். அவர்தான் ஜாக் மா. இவர்தான் அலிபாபா நிறுவனத்தின் நிறுவனர். 2016 ஆம் ஆண்டில் உலகின் 33 வது கோடிஸ்வரர் இவர். தோல்விகளைக் கண்டு தயங்காத அவர் உள்ளம் நமக்கு ஆச்சரியத்தை தருகிறது. தொடர் முயற்சிகளை எடுக்க தவறாத அவரின் தாராள இதயம் நம் அனைவரின் கவனத்தை ஈர்க்கிறது. அவரின் வெற்றிக்கான படிக்கட்டுகள் பல. வாருங்கள் படிக்கட்டுகளைப் பார்க்கலாம். அவை ஒவ்வொன்றும் நமக்கு பசுமையான பாடங்களளே.
30 முறை வெவ்வேறு வேலைகளுக்கு விண்ணப்பித்து 30லும் தோல்வியடைந்தவர்
KFC-யில் வேலைக்கு விண்ணப்பித்த 24 பேரில் ஜாக் மா மட்டுமே நிராகரிக்கப்பட்டவர்
ஜாக் மா ” நான் ஆரம்ப பள்ளித் தேர்வில் 2 முறை தோல்வியடைந்தேன், நடுநிலைப் பள்ளித் தேர்வில் 3 முறை தோல்வியடைந்தேன், கல்லூரி நுழைவுத் தேர்வில் 2 முறை தோல்வியடைந்தேன் பிறகுதான் பட்டம் பெற்றேன்” என்று தெரிவித்தார்.
கல்லூரி நுழைவுத் தேர்வில் கணிதத்தில் 120 மதிப்பெண்ணுக்கு 1 மதிப்பெண் மட்டுமே எடுத்தவர்
ஹார்வர்ட் (Harvard) பல்கலைக்கழகத்தால் 10 முறை நிராகரிக்கப்பட்டவர்
Alibaba இலாபம் இல்லாத தொழில் என முதலீட்டாளர்களால் கூறப்பட்டு முதலீட்டை பெறுவதற்கு நிராகரிக்கப்பட்டது
1998 ஆண்டில் ஜாக் மா பொருள் விற்பனையாளர்கள் மற்றும் வாங்குவோர்களை இணைக்கும் Alibaba என்ற நிறுவனத்தை தொடங்கினார். அவர் பல தோல்விகளால் பாதிக்கப்பட்டார்.
மூன்று ஆண்டுகள் வரை Alibaba எந்தவித லாபத்தையும் ஈட்டவில்லை.
ஜாக் மா Alipay என்ற ஆன்லைன் பண பரிவர்த்தனை இணையத்தை தொடங்கிய போது அவரின் ஐடியா முட்டாள்தனமானது என்று கூறினார்கள். இன்று உலகமுழுவதும் அதிகமான ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் Alipay மூலமே நடைபெறுகின்றன.
வாழ்க்கை என்பது பல்வேறு முயற்சிகளால் கட்டப்பட்டுள்ளது. அந்த முயற்சிகளை நாம் சிறப்பாக எடுக்கும்போது நாம் சிறகடித்து பறக்க முடிகிறது. முயற்சிகளை எடுக்க தயங்கும்போது நாம் தாழ்வாக செல்கிறோம். பொதுக்காலம் 30ம் ஞாயிறு வாழ்க்கையில் முயற்சிகள் எடுக்க தயங்காதே, தளராதே என அருமையான உற்சாக வார்த்தைகளைக் கொண்டு நமக்கு உயிர் கொடுக்க வந்திருக்கிறது. இன்றைய நற்செய்தி வாசகம் தயங்காமல் தளராமல் விடாமுயற்சியோடு போராடி இயேசுவைச் சந்தித்த பார்வையற்ற பர்த்திமேயுவை நமக்கு எடுத்துக்காட்டாகத் தருகிறது. அவர் முயற்சி எடுக்க தயங்கவில்லை. போராட தயங்கவில்லை. அவனமானங்களை சந்திக்க தளரவில்லை. அத்தனை முயற்சிகளையும் எடுத்தார். நினைத்ததை சாதித்தார்.
அன்புமிக்கவர்களே! வாழ்க்கை என்பது என்ன? இந்த கேள்வியை உங்களுக்குள்ளே இன்று இப்போது ஒரு முறை கேட்டுப்பாருங்கள். வாழ்க்கை என்பது
– உயிரோடு இருப்பதா?
– மகிழ்ச்சியாக இருப்பதா?
– பணம், புகழைத் தேடி தலை தெறிக்க ஓடுவதா?
– தோல்விகளில் கற்றுக் கொள்வதா?
– வெற்றிகளில் பெற்றுக் கொள்வதா?
– தன்னலமற்ற அர்ப்பணிப்பா?
– தத்துவங்களின் அணிவகுப்பா?
இவைகளில் எது வாழ்க்கை என்று உறுதியாக கூற முடியாவிட்டாலும், பிறந்தவர் அனைவரும் வாழ்ந்தே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ஏதோ வாழ்கிறேன் என்பதற்காக வாழ்க்கை நமக்கு தரப்படவில்லை. இதற்காகத் தான் வாழ்கிறேன் என்ற அறிவிப்பை கொடுத்துக்கொண்டே வாழத்தான் வாழ்க்கை நமக்கு தரப்பட்டிருக்கிறது. வாழ்க்கையை நாம் பல வடிவங்களில் புரிந்துக்கொள்ள வேண்டும் அவற்றுள் முக்கியமான மூன்று.
1. வாழ்க்கை ஒரு வரம்
வாழ்க்கை என்பது ஓர் அனுபவம். இந்த அனுபவம் ஆளுக்கு ஆள் மாறுபடும். சுகமோ துக்கமோ அனுபவம் நம்மை பலப்படுத்துகிறது. காயப்படுத்துகிறது, சிரிக்க வைக்கிறது, அழவைக்கிறது. முடிவில் இதில் எது வாழ்க்கை என்று சிந்திக்க வைக்கிறது. இறைவனால் இவ்வுலகில் படைக்கப்பட்ட மற்ற உயிர்களுக்கு வாழ்க்கையை பற்றிய ஆராய்ச்சி எதுவுமில்லை. விலங்குகள் தற்கொலை செய்து கொள்வதுமில்லை. காரணம் அவைகளுக்கு முடிவை பற்றிய பயமில்லை. அந்த வகையில் அறியாமை ஒரு வரம்.
தான் அறிவாளி என்று கர்வப்படும் மனிதனால் வாழ்க்கையில் ஜெயிக்க முடிவதில்லை. காரணம் அறிவு மட்டும் வாழ்க்கைக்கு போதாது. அதற்கு மேலும் ஒன்று தேவைப்படுகிறது. அது என்ன..? தயங்காத உள்ளம், தளராத இதயம். அவமானங்களைக் கண்டு தளராத மனம். தோல்விகள், பலவீனங்கள், அவமானங்கள் மத்தியிலும் தொடா்ந்து போராடும் தயங்காத இதயம்.
ஒவ்வொருவரின் வாழ்க்கை அனுபவங்களே அவர்களின் வழிகாட்டி. அனுபவங்களிலிருந்து அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அப்படி கற்றுக் கொண்டவன் ஜெயிக்கிறான். கற்றுக்கொள்ளாதவன் தவிக்கிறான்.
ஒரு ஜெர்மனிய பழமொழி, “அனுபவம் என்ற பள்ளியில் மூடன் எதையும் கற்றுக் கொள்ளமாட்டான்” என்கிறது. அப்படி கற்றுக் கொள்ளாதவரை வாழ்க்கை அவனுக்கு வசப்படாது.
மற்ற உயிரினங்களிலிருந்து மனிதன் பல விதத்தில் மாறுபடுகிறான். சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்வதில், தன் தேவைகளை தானே தேடி பூர்த்தி செய்து கொள்வதில், நன்மை- தீமைகளை பகுத்தறியும் விதத்தில் பிறருக்கு வழிகாட்டியாக இருப்பதில்..! இத்தனையும் பெற்று, சிந்தித்து செயல்படும் திறன் பெற்றிருக்கும் மனிதன், சில நேரங்களில் மிருகத்தை விட கீழ்நிலைக்கு வந்து விடுகிறான். போகும் திசை தெரியாமல் மயங்கி நிற்கிறான். அப்போது தான் வாழ்க்கையில் பயம் ஏற்படுகிறது. ஆகவே வாழ்க்கை என்ற ஆசிரியரின் பாடங்களை நன்கு கற்றறிய வேண்டும். வாழ்க்கையை வரமாக பார்க்க வேண்டும். நடக்கும் ஒவ்வொன்றும் கடவுளின் வரம் தான். அப்படி இருக்கும்போது பயம் அனைத்தும் பறந்து போகும். வாழ்வில் வரங்கள் அனைத்தும் வந்து குவிந்துக்கொண்டே இருக்கும்.
2. வாழ்க்கை ஒரு வானம்
வானத்திலிருந்து இடியும், மழையும் வருவது போல வாழ்க்கையிலிருந்தும் இன்பமும் துன்பமும் வருவது உண்டு. துன்பம் வரும்போது அதை வாழ்க்கைக் கொடுக்கும் வசந்தத்திற்கான வாய்க்கால் என எடுத்துக்கொள்ள வேண்டும். தோல்விக்கு பின்பு கிடைக்கும் வெற்றிக்காக காத்திருக்க மனிதனுக்கு பொறுமையில்லை. தோல்வியே வாழ்க்கை என்று முடிவுசெய்து, தனக்கு சோகமான முடிவைதேடிக் கொள்கிறான். தோல்விகள் நமக்கு நல்ல அனுபவங்களை தந்து, நம்மை பலசாலியாக்குகிறது.
நம்பிக்கை எனும் வானவில் நம்மிடம் எப்போதும் இருக்கவேண்டும். வானவில் தோன்றும் போது வானம் அழகாகிறது. நம்பிக்கை தோன்றும் போது வாழ்க்கை அழகாகிறது. ஒவ்வொரு மனிதனின் கையிலும் அழகான வாழ்க்கை இருக்கிறது. அதை வளப்படுத்தும் நம்பிக்கை எனும் வானவில்தான் தோன்ற மறுக்கிறது. அப்போது வாழ்க்கை வெறுமையாகிறது. அந்த வெறுமையை நிரப்ப யாராலும் முடியாது.
இரவும், பகலும் வருவதுமில்லை. போவதுமில்லை. அவை பூமி சுழலுவதால் ஏற்படும் மாற்றங்கள். சுகமும், துக்கமும் வருவதுமில்லை. போவதுமில்லை. நாம் வாழ்வதால் வரும் மாற்றங்கள். பூமி இரவுக்காக வருந்துவதுமில்லை, பகலுக்காக மகிழ்வதுமில்லை. அது தன் பணியை செய்துக் கொண்டே இருக்கிறது.
சூரியன் உயிர்களை வளர்க்கிறது. காக்கிறது. அது இல்லாத நேரத்திலும் உயிர்கள் அதை எதிர்நோக்கி காத்திருக்கிறது. ஆனால் இன்றைய அவசர மனிதனிடம் விடியலுக்காக காத்திருக்கும் பொறுமையில்லை. கல்வியறிவு அதிகமில்லாத காலத்தில் கூட இருந்திராத மனச்சுமை, டென்ஷன், தற்கொலைகள், இப்போது தான் அதிகமாகி வருகிறது. எந்த அறிவியல் வளர்ச்சியும் இவர்களை வாழவைப்பதில்லை. இந்த நவீனயுகத்தில் தற்கொலை தடுப்பு மையங்கள் ஆங்காங்கே உருவாகி வருவது வரமா? சாபமா?
உங்களுடைய வாழ்க்கையில் மற்றவர்களுக்கு தேவையான முன் உதாரணம் இருக்க வேண்டும். தோல்விகளை தாண்டி வெளிவந்தால் தான் அங்கே வெற்றி நம்மை வரவேற்க காத்திருக்கும். வெற்றிக்காக உழைக்கிறோம். தோல்வி நம் முன்வந்து நிற்கும் போது துவண்டு போகிறோம். தோல்வி தான் முதலில் வரும். அது உலக இயல்பு.
தோல்வியை கண்டு மிரண்டு போய் வாழ்க்கையை தொலைத்து விடுகிறோம். ஏன் இந்த அவசரம். தோல்விக்கு பின் வெற்றி என்ற வாக்கு பொய்யா, மெய்யா என்று பொறுத்திருந்து பார்க்கலாமே. வாழ்க்கையில் ஏற்படும் தோல்விகளை நண்பர்களாகப் பார்த்து அதிலிருந்து நல்பாடங்களை கற்றுக்கொண்டு அதிலிருந்து முன்னேற்றத்தை நோக்கி நகரலாம். வாழக்கை என்ற வானத்தில் சிறகடித்து பறக்கலாம்.
3. வாழ்க்கை ஒரு வளம்
இன்று பல்வேறு சூழலால் பாதிக்கப்பட்ட மனிதர்கள் வாழ்க்கையில் நம்பிக்கை இழந்து காணப்படுகிறார்கள். எதிர்பார்த்த ஒன்று கிடைக்காவிட்டால் விரக்தியின் எல்லைக்கே போய்விடுகிறார்கள். நாம் நினைத்தால் எதுவும் நடக்கும் என்ற தத்துவம் அவர்களுக்கு புரிவதில்லை.
நாம் நினைக்கும் எண்ணங்கள் உறுதியாகவும், நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும். அந்த பாசிடிவ் எண்ணங்கள் நம் சூழ்நிலைகளை மாற்றியமைத்து நம்மை வெற்றி பாதையில் அழைத்துக் செல்லும். நம் எண்ணம் ஒருநாள் செயலாகும் போதுதான் அந்த எண்ணத்தின் வலிமை புரியும். நாம் எதுவாக நினைக்கிறோமோ அதுவாக மாறிவிடுவோம்.
– நம்மைவிட உடலில் பலசாலி யானை
– நம்மைவிட வேகத்தில் சிறந்தது குதிரை
– நம்மைவிட உழைப்பில் சிறந்தது கழுதை.
இப்படி மிருகங்கள் நம்மைவிட பலமடங்கு பலசாலிகளாக இருந்தாலும், நாம்தான் இவைகளை அடக்கி ஆள்கிறோம். காரணம் மனிதன் மட்டுமே அதிக ஆற்றல் கொண்டவன். நமக்கு ஏற்படுகிற பிரச்சினைகளும் அப்படித்தான். அதனை அடக்கியாளும் சக்தி நம்மிடம் உள்ளது. ஆகவே அன்புமிக்கவர்களே! வாழ்க்கை நமக்கு தந்திருக்கின்ற வளங்களை பயன்படுத்துவோம். வானம் வரை உயர்வோம்.
மனதில் கேட்க…
1. என் வாழ்க்கையில் முயற்சிகள் எடுக்க தயக்கம், தளர்ச்சி உள்ளதா?
2. வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கிறேனா? அல்லது கடத்திக் கொண்டிருக்கிறேனா?
மனதில் பதிக்க
என் அருள் உனக்குப் போதும்(2கொரி 12:9)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா