தம் சிறகுகளால் நம்மை அரவணைப்பார்
திருப்பாடல் 91: 1 – 2, 3 – 4, 14 – 15
இறைவன் மீது நம்பிக்கை வைக்கிறவர்களுக்கு இறைவன் எப்படியெல்லாம் பாதுகாப்பாக இருப்பார் என்பதை, இந்த திருப்பாடல் நமக்கு எடுத்துக் கூறுகிறது. இங்கே இறைவனே பேசுவதாக, திருப்பாடல் ஆசிரியர் எழுதியிருக்கிறார். இறைவன் என்ன பேசுகிறார்? தன்னை அன்பு செய்கிறவர்களுக்கு தான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன் என்பதுதான், இறைவனுடைய கூற்றாக இருக்கிறது.
இறைவன் தன்னை முழுமையாக நம்புகிறவர்களுக்கும், தன்னை நோக்கி மன்றாடுகிறவர்களுக்கும் எப்படியெல்லாம் உதவி செய்யப்போகிறார் என்பதை, இந்த திருப்பாடல் நமக்கு விளக்கமாகக் கூறுகிறது. அதைத்தான் இன்றைய நற்செய்தி வாசகமும் நமக்கு அறிவிக்கிறது. இயேசு தொழுகைக்கூடத்தலைவரின் மகளையும், பல ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் அவதியுற்ற பெண்ணையும், அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையின் மிகுதியினால் காப்பாற்றினார் என்பது, இங்கே நமக்கு தெளிவாக விளக்கப்படுகிறது. ஆக, கடவுளை நம்பினோர் எப்போதுமே கைவிடப்பட மாட்டார்கள் என்பது, இங்கே தெளிவாகிறது.
நம்முடைய வாழ்வில் நாம் எப்போதும் கடவுளை தேடுகிறவர்களாக மாற வேண்டும். கடவுளை வெறுமனே பணத்திற்காகவும், பதவிக்காகவும், அதிகாரத்திற்காகவும் மட்டுமில்லாமல், கடவுள் நம்முடைய வாழ்வில் வேண்டும் என்கிற எண்ணத்தோடு தேட, இந்த திருப்பாடலை நாம் தியானிப்போம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்