தன்னலம் துறந்து சிலுவையைச் சுமப்போம்
இயேசுவும் தான் மெசியா என்பதை மறுக்காமல் ஏற்றுக்கொள்கிறார். தான் மெசியா என்பதை ஏற்றுக்கொண்ட இயேசு எப்படிப்பட்ட மெசியா என்பதை இன்றைய நற்செய்தியில் விளக்கிக்கூறுகிறார். வழக்கமாக போரை வழிநடத்திச்செல்கின்ற அரசர் பாதுகாப்பாகத்தான் இருப்பார். அரசரைப்பர்துகாப்பதற்காக படைவீரர்கள் தான் துன்பங்களைத்தாங்கிக்கொண்டு தங்கள் உயிரைத்தியாகம் செய்வர். இங்கேயோ மக்களைப்பாதுகாக்க, மெசியா துன்பப்படவேண்டும், தன் உயிரைத்தியாகம் செய்ய வேண்டும் என்ற புதிய சிந்தனையை இயேசு தருகிறார். மேலும் தன்னைப்பின்செல்கிறவர் கடைப்பிடிக்க வேண்டிய ஒழங்குமுறைகளையும் இயேசு விவிரிக்கிறார்.
இயேசுவைப்பின்பற்ற வேண்டுமானால் 1. ஒருவர் தன்னலம் துறக்க வேண்டும், 2. நாள்தோறும் சிலுவையைத்தூக்க வேண்டும். தன்னலம் என்பது தன்னை முன்னிறுத்துவது. தன் நலனுக்கான காரியங்களை மட்டும் செய்வது. அதற்காக மற்றவர்களைப்பயன்படுத்துவது. தனக்கு எந்த துன்பமும் வரக்கூடாது, தான் மட்டும் நன்றாக இருந்தால் போதுமானது, மற்றவர்களைப்பற்றிய கவலையும், அக்கறையும் இல்லாத மனநிலை தன்னலம். இயேசுவைப்பின்பற்ற வேண்டுமானால் இந்த தன்னலத்தை துறக்க வேண்டும். அதாவது, தன் ‘நலம்’ துறந்து மற்றவர் நலன் காக்க வேண்டும். இரண்டாவது ஒவ்வொருநாளும் சிலுவையைத்தூக்க வேண்டும். சிலுவைச்சாவு என்பது யூதர்கள் அறிந்திராத ஒன்றல்ல. கொலைக்குற்றவாளிகளுக்கு கொடுக்கப்படும் தண்டனை இந்தச்சிலுவைச்சாவு. எவ்வளவு கொடுமையானது என்று அவர்களுக்கு சொல்லித்தெரிய வேண்டியதில்லை. எனவேதான் இயேசு இந்த வார்த்தையைப்பயன்படுத்துகிறார். அதாவது, இயேசுவைப்பின்பற்ற விரும்பினால் நாள்தோறும் இப்படிப்பட்ட சிலுவையை சுமக்க வேண்டியதிருக்கும். எனவே, இயேசுவைப்பின்பற்றுவதற்கு முன்னதாக நாம் இவற்றை முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும்.
இயேசுவின் சீடர்களாக வாழக்கூடிய வாழ்வு எளிதான வாழ்வு அல்ல, மாறாக, கடினமான வாழ்வு. ஆளாலும் வாழமுடியாத வாழ்வு அல்ல. அனைவராலும் வாழக்கூடிய வாழ்வு. வாழ்ந்து காட்டப்படக்கூடிய வாழ்வு. அதுதான் நம் வாழ்விற்கு அர்த்தம் கொடுக்கக்கூடிய வாழ்வு. அத்தகைய வாழ்வு வாழ நாம் உறுதி எடுப்போம்.
~ அருட்பணி. தாமஸ் ரோஜர்