தன்னலமில்லாத வாழ்வு
இந்த உலகத்தில் எல்லாவிதமான வளங்களும் இருக்கின்றன. எல்லாருக்கும் போதுமான அளவு எல்லா கொடைகளையும் கொடுத்து ஆண்டவர் நிறைவாக ஆசீர்வதித்திருக்கிறார். இருந்தபோதிலும், இந்த உலகத்தில் நடக்கக்கூடிய வன்முறைகள், கலவரங்கள், கொலைகள், திருட்டு போன்றவை, நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. என்ன காரணம்? எதற்காக இந்த உலகம் இப்படிப்பட்ட அழிவுப்பாதைக்கு சென்று கொண்டிருக்கிறது? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதிலாக வருவதுதான், இன்றைய நற்செய்தி வாசகம்.
மக்கள் தமக்கென்று வாழ்கிறார்கள். சுயநலத்தோடு வாழ்கிறார்கள். இந்த அடிப்படை சுயநலன் தான், எல்லாவிதமான பிரச்சனைகளுக்கும் காரணமாக இருக்கிறது. சாதியின் பெயரால் பிரித்து, எனது சாதி தான் உயர்ந்த சாதி என்று சண்டையிடுகிறோம். மதத்தின் பெயரால் பிளவுபட்டு, நாங்கள் தான் உண்மையான மதம் என்று, வன்முறையில் ஈடுபடுகிறோம். நாங்கள் சொல்வதைத்தான் மற்றவர்கள் கேட்க வேண்டும், என்கிற செருக்கோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவைகளை உடைத்து வெளியே வருவதற்கு ஆண்டவர் அழைப்புவிடுக்கிறார்.
கிறிஸ்தவன் என்று சொல்லிக்கொண்டு, சாதீயத்தை உயர்த்திப்பிடிப்பதும், நேர்மையற்ற வாழ்க்கை வாழ்வதும், ஒழுக்கக்கேடான முறைகளில் செல்வத்தைச் சேர்ப்பதும், இயேசுவை காயப்படுத்தும் செயல்களாகும். இவையனைத்துமே, நாம் இயேசுவின் துரோகத்திற்கு எதிராகச் செய்யும், அவமானங்களாகும். தன்னலமில்லாமல் வாழ, ஆண்டவரிடம் அருள்வேண்டுவோம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்