தன்னலமில்லாத வாழ்க்கை
திருத்தூதர் பணி 18: 1 – 8
”உங்கள் அழிவுக்கு நீங்களே பொறுப்பு. இனிமேல் நான் பிற இனத்தாரிடம் செல்கிறேன்” என்று, பிற இனத்து மக்கள் நடுவில் தூய பவுல் கடவுளுடைய வார்த்தையை அறிவிக்கச் செல்கிறார். இதற்கு முந்தைய பகுதியில் பவுல் ஏதேன்ஸ் நகரில் நற்செய்தி அறிவித்ததைப் பார்த்தோம். ஏதேன்ஸ் நகரில் பவுல் துன்புறுத்தப்பட்டாரா? என்பது தெரியவில்லை. ஆனால், அங்கு அவர் சரியான முறையில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பது உறுதி. அங்கிருந்து புறப்பட்டு கொரிந்து நகருக்கு வருகை தருகிறார்.
கொரிந்து நகரம் செல்வமிக்கதும், பிரமாண்டமானதுமாகும். பவுல் மிகச்சிறந்த கல்விமானாக இருந்தாலும், கூடாரம் செய்வது அவரது தொழில். அதனை அவர் ஏளனமாக நினைக்கவில்லை. தான் இவ்வளவு படித்திருக்கிறேன், கிறிஸ்துவால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன், கடவுள் கொடுத்த வல்லமையைப் பயன்படுத்தி புதுமைகளைச் செய்கிறேன். எனவே, என்னோடு இருக்கிறவர்கள் எனக்கு செய்ய வேண்டிய காரியங்களைச் செய்ய வேண்டும் என்று, அவர் சோம்பேறித்தனம் படவோ, அடுத்தவரின் பணத்தில் தன்னுடைய வாழ்க்கையை நடத்தவோ விரும்பவில்லை. தானே உழைத்து, தன்னுடைய வாழ்வை நகர்த்துகிறார். மற்ற நேரங்களில் அவர் கடவுளின் வார்த்தையை மக்கள் நடுவில் அறிவிக்கிறார்.
தற்பெருமை நமக்கு அழிவைக் கொண்டுவரும். தன்னலமில்லாதவர்களாக, மற்றவர்களை மதித்து நடக்கிற மனிதர்களாக நாம் வாழ்கிறபோது, இந்த உலகம் நமக்கான மதிப்பை வழங்கும். நம்முடைய வாழ்வும உயர்வு அடையும். ஆனால், கர்வத்தோடு வாழுகிறபோது, அது நமக்கு மிகப்பெரிய அழிவையே கொண்டுவரும். அடுத்தவருடைய செல்வத்திற்கோ, பொருளுக்கோ ஆசைப்படாமல், நமக்கு நாமே உண்மையுள்ளவர்களாக வாழ வரம் வேண்டி, இந்த வாசகத்தைத் தியானிப்போம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்