தனிமையில் தன்னிலை உணர…
மாற்கு 6:30-34
உடலினை உறுதி செய்ய ஆயிரம் வலிகள் இருக்கின்றன. ஆனால் உள்ளத்தை, ஆன்மாவினை வலிமையாக்க தனிமையினால் மட்டுமே முடியும். தனிமை என்பது தன்னிலே இனிமைக் காண்பது. தனிமையிலே தன்னிலையை உணர்வது. இயேசு இன்றைய நற்செய்தியில் மக்களிடம் பணி செய்துவிட்டு வந்த தன் சீடர்களிடம் தனிமையில் சென்று ஒய்வெடுக்க சொல்கிறார். அந்த ஒய்வு எடுத்தலினை தனிமையாயிருக்க யாருமே இல்லாத ஒரு பாலை வனத்துக்கு சென்று ஒய்வு எடுக்க சொல்கிறார். தனிமையில் மட்டுமே நம்மை நாமே சீர்; தூக்கி பார்க்க முடியும், ஆராய முடியும். உண்மையிலே சொல்ல வேண்டுமென்றால் தனிமை நமக்கு பல விடயங்களை கற்று தருகிறது. இந்த தனிமையில் நாம் ஏறெடுக்கின்ற இந்த உள்ளொளிப் பயணம் துறவறத்துக்கு மட்டுமல்ல. இல்லறத்தை நல்லறமாக்க மிகவும் தேவைப்படுகின்றது.
மேலும் இன்றையய நற்செய்தி நல்ல தலைவன் என்பவர் எப்படி இருக்க வேண்டுமென்றும் நம் இயேசு நமக்கு படம் பிடித்துக் காட்டுகிறார். சீடர்களைத் நாடி வந்தவர்களை அவர் சந்திக்கிறார். தன் சீடர்கள் அனைவரின் பணியை அவரே நிறைவு செய்கின்றார். தன் சீடர்களை இளைப்பாற சொல்லிவிட்டு அவர் மக்களை இளைப்பாறச் செய்கின்றார். இங்கிருந்தே அவர் பிறரின் சிலுவையை தூக்கி சுமக்க ஆரம்பித்துவிட்டதாவே நான் பார்க்கின்றேன்.
– திருத்தொண்டர்.வளன் அரசு