தனக்கு எதிராகத் தானே … !
“தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் நிலைத்து நிற்க முடியாது. தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த வீடும் நிலைத்து நிற்க முடியாது” என்னும் ஆண்டவர் இயேசுவின் அமுதமொழிகளை இன்று சிந்திப்போம்.
ஒன்றுபட்டால்தான் வாழ்வு, பிளவுபட்டால் தாழ்வு என்னும் உண்மையை ஆண்டவர் நன்கு எடுத்துரைக்கின்றார். ஆனால், இன்று எத்தனை குடும்பங்கள் தங்களுக்குத் தானே பிளவுபட்டு நிற்கின்றன? ஏன் திருச்சபையிலும் இந்த நிலையைப் பார்க்கின்றோம்.
திருச்சபைக்கெதிரான செயல்பாடுகளைத் திருச்சபைக்குள்ளேயே இருந்துகொண்டு பலரும் செய்வதில்லையா? இறைமக்களின் விசுவாசத்தை, நம்பிக்கைக் கூறுகளை அழித்துப் போட திருச்சபைக்குள்ளேயே சிலர் முயன்று வெற்றி பெறுகின்றனரே? திருச்சபைக்கு எதிராக வழக்கு மன்றம் சென்று, எதிர்ச் சான்றுபுரியும் பொதுநிலையினர், குருக்கள், கன்னியரை இன்று கண்டு நாம் திகைக்கவில்லையா? திருச்சபைக்கு எதிராகப் பேட்டியளிக்கும், நூல்கள் எழுதி விற்பனை செய்யும் குருக்கள், கன்னியரை இன்று ஊடகங்கள் தூக்கிப் பிடிக்கவில்லையா?
இவற்றையெல்லாம் முன் உணர்ந்துதான் ஆண்டவர் இயேசு தொலைநோக்குடன் சொன்னார்: “தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும், எந்த வீடும் நிலைத்து நிற்கமுடியாது”.
இந்த நாளில் நமக்கு எதிராகப் பிளவுபட்டு நிற்கும் நம் வீட்டாருக்காக, திருச்சபை உறுப்பினர்களுக்காக மன்றாடுவோம். நமக்கெதிராக நாமே பிளவுபட்டுவிடாதபடி விழிப்பாயிருப்போம்.
மன்றாடுவோம்: ஆண்டவராகிய இயேசுவே, திருச்;சபையின் உறுப்பினர்களாக இருந்துகொண்டே திருச்சபையைக் காயப்படுத்தும், பிளவுபடுத்தும் கத்தோலிக்கர்களுக்காக மன்றாடுகிறோம். மன்னிப்பு கோருகிறோம். உமது தூய ஆவியின் ஆற்றலால் திருச்சபையை வலிமைப்படுத்துவீராக. உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
~ பணி. குமார்ராஜா