தந்தையை எங்களுக்குக் காட்டும், அதுவே போதும்
இன்று திருத்தூதர்களான புனித பிலிப்பு மற்றும் யாக்கோபு இருவரின் விழாக்களைக் கொண்டாடுகிறோம். அவர்களின் மாதிரியைப் பின்பற்றி நாமும் வாழ முயல்வோம்.
புனிதர்கள் பிலிப்பு, யாக்கோபு – திருத்தூதர்கள்
1 கொரி 15: 1-8
யோவா 14: 6-14
இன்றைய நற்செய்தி வாசகம் பிலிப்புவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பாடத்தை நமக்கு அடையாளப்படுத்துகிறது. “ என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை” என்று இயேசு சொன்னபோது, பிலிப்பு ஆர்வத்துடன் சொல்கிறார்: “ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும், அதுவே போதும்”.
ஆம், அன்புக்குரியவர்களே, தந்தை இறைவன்மீது பிலிப்பு கொண்ட ஆர்வத்தையும், இறையனுபவத்தைத் தவிர்த்த மற்ற அனைத்தையும் தேவையற்றவை எனக் கருதும் மனநிலையையும் அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
“அனைத்திற்கும் மேலாக இறையாட்சியைத் தேடுங்கள், மற்ற அனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்” என்று மொழிந்த இயேசுவின் சொற்களை நினைவுபடுத்துகிறார் பிலிப்பு. “இறைவனே நமக்குப் போதும்” என்ற மனநிலையின் முதல் அடியை இன்று எடுத்து வைப்போமா?
மன்றாடுவோம்: தந்தையின் திருமுகத்தை வெளிப்படுத்தும் இயேசுவே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். இறைவன்மீது என் உள்ளம் தாகம் கொள்ளும் பேற்றினை எனக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
அருள்பணி. குமார்ராஜா