தண்ணீரும் தங்கமும்
06.01.2023 – மாற்கு 1: 7 – 12
ஒருவேளை மீண்டும் ஓர் உலகப்போர் வந்தால் அது தண்ணீருக்காகத்தான் வரும் என சொல்லப்படுகிறது. இது முற்றிலும் உண்மை. இதனை பணம் மற்றும் அதிகாரம் படைத்தவர்கள் அறிந்திருக்கின்றார்கள். எனவே தான் இப்போதே அதனை சுரண்ட ஆரம்பித்து விட்டார்கள். இன்னொருபுறம் நாம் அந்த தண்ணீரை வீணடிக்கின்றோம். இஸ்ரயேல் மக்கள் தங்களை வழிநடத்திய மோசேயிடம் முறையிட்டதும் தண்ணீருக்காகத் தான். ஏனென்றால், பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரயேல் போன்றவர்களுக்கு தண்ணீர் என்பது ஏதோ புதையல் பார்ப்பது போல. தண்ணீர் இருக்கும் இடத்தை நாடி செல்வது அவர்களது இயல்பு. படைப்பு நிகழ்விலும் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது. ஏதேன் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுவதற்காக பீசோன், கிகோன், திக்ரீசு மற்றும் யூப்பிரத்தீசு (தொ.நூல் 2இ10-14) எனும் ஆறுகள் ஓடுகின்றன. ஆகார் தண்ணீர் தந்து தனக்கு வாழ்வு தரும் இறைவனைக் கண்டுகொள்கின்றார். ஆபிரகாம் தான் வாழ்வதற்கு கிணறு ஒன்று வெட்டுவதற்காக அபிமெலக்கோடு உடன்படிக்கை செய்து கொள்கின்றார். தண்ணீர் அந்த அளவிற்கு முக்கியத்துவத்தை பெறுகின்றது. அதனால் தான் மெசியாவுடைய வருகையின் போது பாலைநிலத்தில் நீரூற்றுகள் பீறிட்டு எழும் என்று இறைவாக்கினர் எசாயா கூறுவார்.
இயேசுவும் தன் பணிவாழ்வை தண்ணீரிலிருந்து ஆரம்பிக்கின்றார். இதனைத் தான் முதல் வாசகமும் சுட்டிக் காட்டுகின்றது. நீரினாலும், இரத்தத்தாலும் வந்தவர், தண்ணீரில் ஆரம்பித்து இரத்தத்தை நமக்காக தந்து சென்றுள்ளார். தண்ணீரில் தான் அவர் திருமுழுக்கு பெற்று தூய ஆவியை உள்வாங்குகின்றார். நாம் அத்தகைய தண்ணீருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமா? இல்லையென்றால் இனிவரும் காலத்தில் தண்ணீருக்கு தங்க விலை கொடுக்கும் நிலை ஏற்படும்.
அருட்பணி. பிரதாப்