தகுதியைத் தருகிறவர் கடவுள்
குறைகள் இல்லாத மனிதன் இந்த உலகத்தில் யாருமே இருக்க முடியாது. நம் எல்லோரிடத்திலும் குறைகள் உண்டு. ஆனால், கடவுளிடமிருந்து நமது குறைகளை மறைத்து விடலாம், கடவுளிடமிருந்து தப்பிவிடலாம் என்றால், அது இயலாத காரியம் என்பதற்கு இந்த வாசகம் சிறந்த சாட்சியாக இருக்கிறது. அப்படிப்பட்ட வாழ்வியலோடு, ஒப்புமை செய்து பார்க்கக்கூடிய பகுதியாக இன்றைய பகுதி அமைகிறது.
திருமண விருந்திற்கு பல மனிதர்கள் வந்திருக்கிறார்கள். வந்திருக்கிறவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்திருக்கும். ஏனென்றால், பாலஸ்தீனப்பகுதியில் திருமண விழா என்பது குடும்ப விழா போன்றது அல்ல. அது ஒட்டுமொத்த சமுதாய விழா. அது தனிநபர் விழா அல்ல. அனைவரின் விழா. மணமக்களின் மகிழ்ச்சியில் ஒட்டுமொத்த ஊரினரும் மகிழ்ச்சி அடைகிறார்கள். அப்படிப்பட்ட விழாவில் ஒட்டுமொத்த விருந்தினர்களும் பங்கேற்றிருக்கிறபோது, ஒரு மனிதர் மட்டும், தனியே பிரிக்கப்படுகிறார். அவ்வளவு எண்ணிக்கையில் இருக்கக்கூடிய மனிதர்களுக்கு நடுவில், அவர் மட்டும் தனியே தென்படுகிறார். வெளியே அனுப்பப்படுகிறார். குறைகளை வைத்துக்கொண்டு நாம் மற்றவர்களை ஏமாற்றிவிடலாம். ஆனால், கடவுளை ஏமாற்ற முடியாது. குறைகளோடு கடவுளின் அருளை, நாம் பெற்றுவிட முடியாது.
நமது நிலையை நாம் உணர வேண்டும். நமது தகுதியின்மையை உணர்ந்து, கடவுளிடத்தில் மன்றாடுகிறபோது, கடவுளே நமக்கு நிச்சயம் அந்த தகுதியைத்தருவார். அந்த மனிதன் திருமண விருந்திற்கான ஆடையை, நிச்சயம் வெளியே பெற்றிருக்கலாம். அதனையும் அவன் புறக்கணித்தான். இறுதியில் அவனும் புறக்கணிக்கப்படுகிறான். அவனிடமிருந்து நாம் கற்றுக்கொண்டு, நமது வாழ்வை மாற்றிக்கொள்வோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்