ஞானிகளை வெட்கப்படுத்த தேவன் மடமைகளை தெரிந்துக்கொண்டார்
சிலுவை பற்றியச்செய்தி அழிந்து போகிறவர்களுக்கு மடமையாக தோன்றலாம். ஆனால் மீட்பு பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமையை காணச் செய்யும். ஏனெனில் ” ஞானிகளின் ஞானத்தை அழிப்பேன் . அறிஞர்களின் அறிவை வெறுமையாக்குவேன், என்று மறைநூலில் எழுதியுள்ளது. நாங்கள் ஞானிகள்;ஆண்டவரின் சட்டம் எங்களோடு உள்ளது’ என நீங்கள் எவ்வாறு கூறமுடியும்? மறை நூல் அறிஞரின் பொய் எழுதும் எழுதுகோல் பொய்யையே எழுதிற்று. ஞானிகள் வெட்கமடைவர்; திகிலுற்றுப் பிடிபடுவர்; ஏனெனில், அவர்கள் ஆண்டவரின் வாக்கைப் புறக்கணித்தார்கள்; இதுதான் அவர்களின் ஞானமா? என்று எரேமியா 8 : 8,9,ஆகிய வசனங்களில் வாசிக்கலாம்.
ஞானிகள் தன் ஞானத்தைக் குறித்துப் பெருமை பாராட்டவேண்டாம். வலியவர் தம் வலிமையைக் குறித்துப் பெருமை பாராட்ட வேண்டாம். செல்வர்கள் தம் செல்வத்தைக் குறித்தும் பெருமை பாராட்டவேண்டாம். பெருமை பாராட்ட விரும்புவோர் இயேசுகிறிஸ்துவை அறிந்து அவரே நம்முடைய ஆண்டவர் என்றும், அவரே நமக்காக நம்முடைய பாவத்துக்காக சிலுவை சுமந்து அடிக்கப்பட்டு, நொறுக்கப்பட்டு தமது இரத்தத்தையும், தண்ணீரையும் கொடுத்து நம்மேல் உள்ள அளவிட முடியாத பேரன்பால் நீதியோடும், நேர்மையோடும் செயலாற்றி நம்முடைய வாழ்விற்காக அவர் தமது உயிரையே கொடுத்து மீட்டுள்ளதை நினைத்து பெருமை பாராட்டவேண்டும். இப்படி நாம் அவரைக் குறித்து பெருமை பாராட்டினால் அப்பொழுது ஆண்டவர் நம்மில் மகிழ்வார்.
அதனால்தான் ஆண்டவர் அறிவாளிகளை எல்லாம் வெட்கப்படுத்தும்படி மடமைகளை தெரிந்துக்கொள்கிறார். ஏனெனில் கடவுள்முன் எவரும் பெருமை பாராட்டதபடி அவர் இப்படிச் செய்தார். கடவுளால்தான் நாம் எல்லோரும் கிறிஸ்துவோடு இணைக்கப் பட்டிருக்கிறோம். கிறிஸ்துவே கடவுளிடமிருந்து நமக்கு வரும் ஞானம் அவரே நம்மை ஏற்புடையவராக்கித் தூயவராக்கி மீட்கின்றார். ஆகையால் சகோதர, சகோதரிகளே,நாம் அழைக்கப்பட்ட நிலையை எண்ணிப் பார்த்து அவருக்கு பயப்படும் பயத்தினால் நிறைந்து,கீழ்படிந்து மண்ணான நம்மை அவர் பாதம் சமர்பித்து வணங்கி, முத்தமிட்டு, ஞானத்தையும், ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொள்வோம்.
அன்பு நிறைந்த இறைவா!!
உமக்கு பயப்படும் பயத்தை எங்கள் இருதயத்தில் வைத்து அதன்மூலம் நீர் தரும் ஞானத்தை பெற்றுக்கொள்ள உதவியருளும். நாங்கள் மற்றவர்கள் முன் வெட்கப்பட்டு போகாதபடிக்கு நீர்தாமே உமது ஞானத்தால் எங்களை நிறைவாய் நிரப்பி ஆசீர்வதிக்க வேண்டுமாய் உம்மிடத்தில் கெஞ்சி மன்றாடுகிறோம். ஏனெனில் நீரே ஞானத்தின் ஊற்றாகிய இயேசுகிறிஸ்து. உம்மை அறிகிற அறிவை இந்த பூமியில் வாழும் ஒவ்வொருவருக்கும் அருளச் செய்ய வேண்டுமாய் கரம் கூப்பி வணங்கி,உமது முகத்தை நோக்கி ஏக்கத்தோடு காத்திருக்கிறோம். அன்புத் தெய்வமே!நீரே எங்களுக்கு மனமிரங்கி எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு நல்வழியை போதித்து காத்து ஒவ்வொரு நாளும் வழிநடத்த வேண்டுமாய் இயேசுகிறிஸ்துவின் பெயரால் உம்மிடம் மன்றாடுகிறோம் எங்கள் அன்புத் தந்தையே!
ஆமென்! அல்லேலூயா!!