ஞானம் மெய்யானது !
தன் காலத்து மக்களை இயேசு நன்றாக அறிந்து வைத்திருந்தார். அவர்களிடமிருந்த குறை காணும் மனநிலையையும், எதிர்மறையான பார்வையையும் அவர் தெரிந்திருந்தார். அவற்றைச் சுட்டிக்காட்டி, நேர்மறையாகச் சிந்திக்க இன்றைய நற்செய்தி வாசகம் மூலமாக ;அழைப்பு விடுக்கிறார். இயேசு காலத்தைய யூதர்கள் இயேசுவிடமும் குறை கண்டனர். அவரது முன்னோடியான திருமுழுக்கு யோவானிடமும் குறை கண்டனர். இருவரும் எதிரெதிரான செயல்பாடுகளைக் கொண்டிருந்தனர். ஆனால், இருவரையும் ஒரே விதமாகப் புறக்கணித்தனர். இது அவர்களின் உள்மனக் குறைபாட்டையே எடுத்துக்காட்டுகிறது.
ஒருசிலர் மட்டும் திருமுழுக்கு யோவானையும் ஏற்றுக்கொண்டனர். அவர் சுட்டிக்காட்டிய இறைவனின் செம்மறியாம் இயேசுவையும் ஏற்றுக்கொண்டனர். அவர்கள் திறந்த மனம் என்னும் ஞானம் நிறைந்தவர்களாக இருந்தனர். இவர்களின் செயல்பாடுகள் சான்று பகர்வனவாக இருந்தன. எனவே, இயேசு கூறுகிறார்: ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக்கொண்டோரின் செயல்களே சான்று. இயேசுவையும், அவரது போதனையையும் ஏற்றுக்கொள்ளும் நாம் நமது சான்று பகரும் செயல்களால் நாம் ஞானம் மிக்கவர்கள் என்பதை எண்பிப்போமாக!
மன்றாடுவோம்: ஞானத்தின் ஊற்றே இயேசுவே, உமக்கு நன்றி. நாங்கள் நேர்மறையோடு அனைவரையும் பார்க்கின்ற ஞானம் நிறைந்த கண்களை, உள்ளத்தை எங்களுக்குத் தந்தருளும். எங்கள் செயல்கள் இந்த ஞானத்தை வெளிப்படுத்துவனவாக அமைய எங்களுக்கு அருள்; தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
— அருட்தந்தை குமார்ராஜா