ஞானத்தைத் தேடுவோம்
சாலமோனின் ஞானம் 7: 7 – 11
இறைவனைத் தேடுவோரின் வாழ்க்கை என்றென்றும் மகிழ்ச்சியாக இருக்கும் என்பதை வலியுறுத்திச் சொல்வது தான், இன்றைய வாசகம். இந்த உலகத்தில் வாழ்கிற நாம், எப்போதும் செல்வத்தைத் தேடுகிறோம். செல்வம் தான் எல்லாவற்றிலும் சிறந்தது என்று நம்புகிறோம். பணம் இருந்தால் இந்த உலகத்தில் எதையும் சாதிக்க முடியும் என்பது நமது எண்ணம். அதைத்தான் இந்த உலகமும் கற்றுக் கொடுக்கிறது. செல்வம் இல்லையென்றால், இந்த உலகத்தில் மனிதர்களுக்கு மதிப்பு இல்லை. எனவே, மதிப்பிற்காக, ஆடம்பரத்திற்காக, அதில் தான் மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது என்று, நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு செல்வதைத் தேடுகிறவர்களாக இருக்கிறோம்.
உண்மையில், செல்வம் நமக்கு நிறைவைத் தருவதில்லை. இந்த உண்மையை, எத்தனையோ செல்வந்தர்கள் நமக்கு சொல்லிக் கொடுத்தாலும், அதனை நேரடியாக உணர்ந்தால் அன்றி, அனுபவித்தால் அன்றி, அந்த உண்மையை யாரும் ஏற்றுக்கொள்வதில்லை. சாலமோன் அரசர் ஞானத்தின் பெருமையை இந்த வாசகத்தில் உணர்த்துகிறார். அவர் கடவுளிடம் செல்வத்தைக் கேட்கவில்லை. ஞானத்தையே கேட்டார். கடவுளும் அவருக்கு ஞானத்தை வழங்கினார். அந்த ஞானத்தோடு, அவருக்குத் தேவையான அத்தனை செல்வங்களும் கிடைத்தன. அது தான், ஞானத்தின் சிறப்பு. ஞானத்தைப் பெற்றவர்கள், செல்வத்தை மிகப்பெரிய ஒன்றாக மதிப்பதில்லை. அதற்கு அடிமையாவதில்லை. ஆனால், அவர்களுக்குத் தேவையானதை விட, அதிக செல்வத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள்.
இந்த உலகத்தில் வாழ்வதற்கு நமக்கு செல்வம் தேவை. அது மறுப்பதற்கில்லை. ஆனால், அது நம்மை அடிமைப்படுத்தி விடக்கூடாது. அதில தான் நிறைவு இருக்கிறது என்று, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளக்கூடாது. இந்த உண்மையை நாம் உணர்ந்து கொண்டால் என்றும் மகிழ்ச்சியே.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்